திங்கள், 9 மார்ச், 2009

வைரமுத்து சிந்தனையில்...மார்ட்டின் லூதர் கிங்



தாத்தாக்களின் பெருமைகளை பேரன்கள் பேசுவதில் பெருமை மட்டும் இருக்கக்கூடாது.சிறிது பிரயோஜனமாவது இருக்கவேண்டும். மார்ட்டின் லூதர் கிங் நினைவு விழாவில் பேசிய வைரமுத்துவின் பேச்சில் அது இருந்தது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கும் சம உரிமை கேட்டு போராடிய மார்ட்டின் லூதர் கிங், 50 வருடத்திற்கு முன் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இதன் நினைவு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலை ஞானியும், கவிப்பேரரசும் கலந்து கொண்டனர்.கமல் 20 நிமிடங்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

வைரமுத்து தன் பங்குக்கு லூதர் கிங் பற்றி ஒரு கவிதை பாடினார். அக்கவிதையில் ஈழத்து வாடையும் அக்கறையும் இருந்தது. கவிதை கேளுங்கள்.....

“மார்ட்டின் லூதர் நீ மட்டும் இன்றிருந்தால்
எங்கள் ஈழத்து மேகம்
ரத்தத்துளிகளை பெய்திருக்காது

புத்த பிக்குகளின் மஞ்சலாடை
செந்நிறம் பூண்டிருக்காது

கடல் பாலம் போல தமிழ்ப் பிணங்களின் உடல் பாலம்
உண்டாகியிராது

மாதுளம்பிஞ்சில் இடி விழுந்த மாதிரி
சிசுக்களின் கபாலம் சிதறியிராது

தமிழச்சிகளின் கர்ப்பக்குழிகளில்
மிருகக் கொழுப்பு விழுந்திருக்காது

என் கறுப்பு சகோதரா!

உன் தொண்டுக்கு வணக்கம் செய்கிறோம்.
தோளுக்கு மாலை தருகிறோம்

உன் கைகளில் மட்டும்

இலங்கைத் தமிழனின் ரத்தம் ஒரு சொட்டும்
கண்ணீர் ஒரு சொட்டும்.

தயவுசெய்து வெள்ளை மாளிகையை
நனைக்கச் செய
ஐ.நா.சபையை நினைக்கச்செய்!

என முழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக