புதன், 13 ஜனவரி, 2010

திரை இசையில் இசைப்புயலின் மாற்றம்


மொத்தம் ஏழு பாடல்கள். ராகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகமாய் இனிக்கவும் சிலிர்க்கவும் வைத்தது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானின் விரல்கள் ஜாலம் காட்டியுள்ளது.
லண்டனில் சில வாரங்களுக்கு முன் பாடல் வெளியீட்டு விழாவை நடத்திய கெளதம் மேனன், இரண்டாவது முறையாக சென்னையிலும் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் இப்படி பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாய் இருந்தது விழா.
திரையில் படத்தின் ஸ்டில்கள் ஒளி பரப்ப,படத்தில் பாடியுள்ள அத்தனை பாடகர்களும் மேடையேறி லைவ் ஷோ நடத்த, செவிகளுக்கும், விழிகளுக்கும் செம விருந்து. ‘ஓமன பெண்ணே..’,’ஹோசானா...’ விண்ணைத்தாண்டி வருவாயா..’,’மன்னிப்பாயா...’ உள்ளிட்ட அத்தனைப்பாடல்களும் செம ஸ்வீட்.
விழாவின் வி.ஐ.பி.கள், ரஹ்மானும், கமலும்தான். மேடையில் வத வதவென்று இருக்கைகள் போடாமல் வி.ஐ.பிகளை மேடையேற்றிய கெளதம் மேனன், கமலின் கையில் சி.டியை கொடுத்து வெளியிட வைத்தார். ”ஐம்பது வருடங்களுக்கு முன் கேமிரா முன் நின்ற கமல் இப்போதும் நடித்துக்கொண்டிருப்பது புல்லரிக்க வைக்கிறது” என்று கெளதம் பேச, அடுத்து பேசிய கமல்,” எனக்குள் இன்னும் அரிப்பு இருப்பதால்தான் இன்னுமும் இயங்க முடிகிறது. த்ரிஷா போலவே படத்தையும் அழகாக எடுத்திருக்கிறார் இயக்குனர்” என பாராட்டினார்.
”பேசுறதுக்கு ஒண்ணும் இல்லை, ஜெய்கோ..” என பேச்சை முடிக்க பார்த்த இசைப்புயல், ”வழக்கமா பல்லவி சரணம் இல்லாத ஒரு ஸ்டைலை இந்த படத்தில் டிரை பண்ணியிருக்கிறேன். எல்லாருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் “என தனது புதுப்பாணி பற்றி முதல் முறையாக சொன்னார்.

வியாழன், 7 ஜனவரி, 2010

’விண்ணைத் தாண்டி வருவாயா’ பாடல் வெளியீடு

திங்கள், 4 ஜனவரி, 2010

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

‘கந்தகோட்டை’ விமர்சனம்

பெட்டிக்கடைகளிலும் கிடைக்கும் அளவிற்கு மலிவாகிவிட்ட மசாலா பார்முலாவில் காதல்,கத்தல், கத்தி எல்லாவற்றையும் கூட்டுவைத்து, ரசிகர்களின் கண்ணுக்கும் காதுக்கும் வேட்டு வைக்கும் படம்.
ஹீரோ நகுலுக்கு காதலுக்கு சிகப்புக்கொடி காட்டும் வேலை என்றால் நாயகி பூர்னா, காதலர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் சேவையில் தீவிரம் காட்டுகிறார். இருவரும் காதலர்களாக மாறும்போது இடைவேளை வருமென்பது பச்ச புள்ளைகளுக்கும் தெரிந்த்துதானே! இதிலும் அது நடக்கிறது.
நகுல் சொன்ன ஐ லவ் யூவுக்கு பதில் சொல்லாமல் பஸ் ஏறும் பூர்ணாவுக்கு ஊரில் ஒரு பிரச்சனை வருகிறது. காதலியை பார்ப்பதற்காக நாகர்கோயிலுக்கு போகும் நகுலுக்கு இது தெரியவர, அடுத்த நிமிஷத்திலிருந்து ஆரம்பமாகிறது வில்லனுடனான மோதல். கடைசியில் எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.
நகுல் ஸ்டூடண்டா, வேலை தேடுபவரா என்ற எந்த விபரமும் தெரியாமலேயே கடைசிவரை கண்ணாமூச்சி காட்டியிருக்கும் இயக்குனரின் திறமை ‘பளிச்சிடுகிறது’. குறைந்த பட்சம் அவரும் அவரது நண்பர்களும் வெட்டி ஆபீசர்கள் என்பதை காட்டியிருந்தலாவது நிம்மதி இருந்திருக்கும்.
நகுலின் சுறுசுறுப்பு, பாட்டுக்கும் பைட்டுக்கும் தோள் கொடுத்தாலும் முக பாவணைகளில் இயல்பு காணாமல்போவது மைனஸ். காமெடி பெயரில் கடித்துகுதறுகிறார் சந்தானம், அடிக்கடி ஜட்டி போட்டிருக்கியா? என்று கேட்பதெல்லாம் அபத்தம்.
”டேய் வாடா வாடா.... என் கையாலதான் உனக்கு சாவு வாடா வாடா” என்று வில்லன் சம்பத் கத்தும்போதெல்லாம் காது ஜவ்வில் விழுகிறது ஓட்டை.
ஹீரோவும் வில்லனும் மோதும்போது நாம இசையுடன் மோ’தினா’ என்ன என்று நினைத்திருப்பார்போல தினா. டகட டகட டகட என்று ஒரு பின்னணி கொடுத்திருக்காருங்க பாருங்க. படத்துல அதுவும் ஒரு வில்லனாக மிரட்டுகிறது. ‘கல கல கந்தகோட்டை’ பாட்டு குத்தாட்ட ப்ரியர்களுக்கு குஷி. நகுலின் குரலில்‘உன்னை காதலி என்று சொல்லவா’ பாடல் ரசிக்கலாம். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் ஆங்காங்கே அவுட்டாப் ஃபோக்கஸ்.
’கந்தகோட்டை’ நொந்தகோட்டை.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

'வேட்டைக்காரன்'விமர்சனம்

'வேட்டைக்காரன்' தலைப்பு வச்சிருக்காங்களே நல்ல கதை சிக்கியிருக்குமோ! என்ற சந்தேகம்கூட எழாமல், விஜய்யின் படம் இப்படித்தான் இருக்கும் என தியேட்டருக்குள் நுழைபவர்களின் நம்பிக்கையை கொஞ்சமும் சிதைக்காமல் காப்பாற்றியுள்ளார் இயக்குனர் பாபுசிவன்.

படிப்பிற்காகவும், பிழைப்பிற்காகவும் சென்னை வரும் நாயகனுக்கும் வில்லனுக்கும் ஏழரை பாலம் போடுவது, க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு ஜெயம் கைக்குலுக்குவது என்ற பழைய பஸ் டிக்கெட்டில் எழுதிய கதையே இஸ்திரி போட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் படிக்கும் ப்ளஸ் டூ ஸ்டுடண்டுதான் விஜய். என்னது ப்ளஸ் டூ ஸ்டுடாண்டான்னு? ஆடியன்ஸ் அதிர்ச்சியாகிடக்கூடாது என்பதற்காக பல வருஷமா பரிட்சையில தேறாதவ்ர்ன்னு இயக்குனர் பிடிச்சிருக்காரு பாருங்க ஒரு லாஜிக், என்னத்த சொல்றது.. சரி அத விடுங்க! விஜய் நடிப்பு ? அதே டான்ஸ், ஒரேவிதமான டயலாக் டெலிவரி, ஜீன்ஸ் பேண்டின் தூசு தட்டி வில்லனுக்கு சேவல் ஸாரி சவால் விடுவது, வில்லன்கிட்ட பேசி தொண்டைதண்ணி வற்றிய நேரம் பார்த்து நாயகியுடன் சேர்ந்து, ரொமான்ஸ்,டூயட் என ரீலை வளர்க்க உதவுவது. ம்ஹூம் விஜய் மாறவேயில்லை.

படிக்கவந்த மகனுக்கு ஊரிலிருந்து ஒரு போன் போட்டுக்கூட நலம் விசாரிக்காத விஜய் பெற்றோரின் அக்கறை, திரைக்கதையிலும் தேடவேண்டியுள்ளது. எண்கவுண்டரில் போட்டுத்தள்ள அழைத்துச்செல்லும் போலீஸிடமிருந்து தப்பிக்கும் விஜய், மெட்ராஸ் எல்லையில்தான் குதிக்கிறார் ஆனா திடீர்னு பெரிய அருவி ஒண்ணு வருது பாருங்க, அரசாங்கம் நினைச்சாலும் அப்படியொரு லொக்கேஷனை சென்னைக்கு கொண்டுவரமுடியாதுங்கோ.

தூத்துக்குடி, சாத்துக்குடின்னு நாயகி கேரக்டருக்கு அனுஷ்காவை பிழிந்தெடுத்திருக்கின்றனர். 'புலி உறுமுது...', 'நான் அடிச்சா தாங்கமாட்ட.' பாடலை தவிர மற்ற மூன்று பாடல்களும் சில நிமிட டாக்கி போர்ஷன்களும் அனுஷ்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வில்லன்கனின் முகத்தை அடிக்கடி காட்டி பயமுறுத்துவதற்கு பதில், அனுஷ்காவின் க்ளோசப்பிற்கு எக்ஸ்ட்ரா சீன்கள் வைத்திருக்கலாம்.

விஜய்யின் கல்லூரி நண்பராக வருபவரின் காமெடி செம 'ஸார்ப்' . விஜய்க்காக ஊரிலிருந்து கிளம்பிவரும் நண்பர்கள் எபிசோடிலும் லாஜிக், சத்யனின் மனைவி கேரக்டர் போல அனாதயாக நிற்கிறது. ஒன்றுக்கு இரண்டு வில்லன்கள், விஜய்யின் ஆக்ஷன் அவதாரத்திற்கு கைக்கொடுக்கிறது. மற்றபடி அவர்களிடமும் பார்த்து சலித்த நடிப்புதான் எட்டிப்பார்க்கிறது.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசையில் போகி பண்டிகையின் டம டம. இது விஜய் படம், இயக்குனர் பாபுசிவன் தெரியவில்லை.

வேட்டைக்காரனிடம் மாட்டியது மக்கள்தான்.

வியாழன், 17 டிசம்பர், 2009