புதன், 27 மே, 2009

ஆக்‌ஷன்... கேமரா : ஷெரின் அடுத்த ஸ்டெப்


ஆக்‌ஷன்... கேமரா : ஷெரின் அடுத்த ஸ்டெப்
இனி நடிகர் நடிகைகளின் கன்னத்தில் ஷெரினின் அறை விழலாம். அட ஆமாங்க.
ஷெரின் டைரக்டராகப் போறாராம்.

வாய்ப்பு இல்லாததால் 'கண்டேன் காதலை' படத்தில் தமன்னாவுக்கு அக்காவாக
நடிக்கப்போறார். ஷெரினைப்பற்றி வந்த லேட்டஸ்ட செய்தி இதுதான். இது
ஷெரின் காதிலும் விழ, அந்த செய்தியை பரப்பியவர்கள் ஷெரின் சாபத்திற்கு
உள்ளாகும் அளவிற்கு கடுப்பானார்.

சரி என்னதான் செஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னு சொன்னாத்தானே தெரியும்
என்றபோது சொன்னார் இப்படி...

"ரொம்ப நாளாவே டைரக்ஷன் மீது எனக்கு ஆசை இருக்கு. ஆசைங்கறதைவிட
கனவுன்னுகூட சொல்லலாம். என்னோட கைவசம் நிறைய கதைகள் இருக்கு.
முதலில் இந்திப் படம் இயக்கலாம் என்று இருக்கிறேன். இயக்குனராவதற்கு
முறைப்படி அனுபம்கெர் பள்ளியில் இயக்கம், நடிப்பு பயிற்சி பெற்று வருகிறேன்.
விரைவில் இந்திப் படமொன்றிலும் நடிக்கவுள்ளேன். அதுபற்றிய அறிவிப்பை
புரொடக்ஷ்ன் கம்பெனி வெளியிடும். அக்கா-தங்கை வேடத்தில் நடிக்கும் அளவிற்கு
எனது தகுதி குறைந்துவிட வில்லை. நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான்
நடிப்பேன்" என கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டாவை இடுப்பில்
இறுக்கிக் கட்டுகிறார். (நல்ல ஸ்டைலுமா!)

இன்னொரு சேதி. ஒளிப்பதிவாளர் கபீர்லாலுடன் இணைந்து ஒரு படத்தை
இயக்கப்போகிறாராம் ஷெரீன்

சோனாவின் நீச்சலுடை: இளையராஜாவின் ரியாக்‌ஷன்?


புடலங்காய் உடம்பாய் இருந்தாலும், பூசணிக்காய் உடம்பாய் இருந்தாலும் நடிகைகள் பிகினி டிரஸில் நடித்தால் அது பரபரப்புதான்.

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் ஆர்.கே.நாயகனாக நடிக்கும் படத்தில். வடிவேலுவுக்கும் முக்கியமான கேரக்டர். திடீரென அவருக்கு ஜோடியாக ஒரு கேரக்டரை சேர்த்துள்ளனர். அவர் சோனா. ‘குசேலன்’ படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலுடன் ஜோடி சேரும் சோனாவின் காஸ்ட்டியூம் நீச்சலுடை மட்டும்தானாம்.


அந்த அனுபவம் குறித்து சோனா கூறியதாவது:-

"எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு... ரொம்ப சந்தோஷமா இருக்கு. வடிவேலு சார் கூட திரும்பவும் ஜோடியா நடிக்கிறேன். 6 நாட்கள் என்னோட கால்ஷீட்... 6 நாளும் என்னை நீச்சல் டிரஸ்லயே நடிக்க வச்சிட்டார் இயக்குநர். என்னைப் பொறுத்தவரை அதுவும் நடிப்பு... ஒரு நடிகையா என் வேலையை பக்காவா பண்ணியிருக்கேன். கிளாமர்னாலும் ரசிக்கிற மாதிரி அந்தக் காட்சிகள் இருக்கும்.இந்தப் படத்துல நடிச்சது நிஜமாகவே ஒரு இனிய அனுபவம். மறக்க முடியாதது...", என்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் காட்சியில் இளையராஜாவும் நடித்துள்ளார். சோனாவின் நீச்சலுடை செய்தியை படித்தப்பிறகு ராஜாவின் ரியாக்‌ஷன் எப்படியிருக்குமோ!?

வெள்ளி, 22 மே, 2009

ஐஸ்வர்யாராய் அடடே... படங்கள்








‘கொல கொலயா முந்திரிக்காய்’


அத்திப்பூப்பதுடன் ஒப்பிடலாம் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் பிரவேசம்.‘வல்லமை தாராயோ’ படம் மூலம் நம்பிக்கை தரும் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, மீண்டும் ஒரு ஸ்கிரிப்டுடன் களம் காணும் படம் ‘கொல கொலயா முந்திரிக்காய்’.

ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஷுட்டிங் ஹவுசில் நேற்று பூஜை போட்ட கையோடு படப்பிடிப்பை தொடங்கிவைத்தார் இயக்குனர் K.பாலச்சந்தர். கார்த்திக் நாயகனாகவும், பெங்களூர் வரவு ஸ்ரீகா நாயகியாக நடிக்கும் படத்தின் கதை,வசனத்தை கிரேசிமோகன் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் மதுமிதா. ‘வெண்ணிலா கபடிக்குழு’ செல்வகனேஷ் இசையமைக்கிறார். திரிசக்தி சந்தரராமன் தயாரிக்கிறார்.
“முழுக்க முழுக்க காமெடி த்ரில்லராகத்தான் இந்த ஸ்கிரிப்டை வடிவமைத்திருக்கிறோம். இந்த கதைக்கு கார்த்திக்கை விட்டால் பொருத்தமான ஹீரோ கிடைக்காது என்பதால் அவரை தேர்வு செய்தேன். ரசிகர்களுக்கு வெரைட்டியான சினிமா கொடுத்தால்தான் அவர்களிடம் நமது பெயரை தக்கவைத்துக்கொள்ளமுடியும். அந்தவகையில் ‘வல்லமைதாராயோ’ படத்தின் ஸ்டைல் துளியுமில்லாத ஒரு திரைக்கதையை இதில் பார்க்கலாம். சென்னை, பாண்டிச்சேரி,காரைக்குடி,தனுஸ்கோடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தப்போகிறோம்” என்ற மதுமிதாவை சுற்றி நின்ற உதவி இயக்குனர்களும் பெண்களே.
“எத்தனையோ காமெடி படங்கள் வந்தாலும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை இதுவரை எந்த படமும் தொடமுடியவில்லை. அந்த தூரத்தை இப்படத்தின் மூலம் தொட முயற்சி பண்ணியிருக்கிறோம். ‘பஞ்சதந்திரம்’ மாதிரி ஒவ்வொரு காட்சியும் காமெடியா இருக்கும்” என வசனகர்த்தா கிரேசி மோகன் சொல்ல, மைக்கை வாங்கிய தயாரிப்பாளர் சந்தரராமன் “ ‘பஞ்சதந்திரம்’ என்பதைவிட இந்த படம் ஆறாவது தந்திரம் என்றால் பொருத்தமாக இருக்கும்” என்றபோது மகள் மதுமிதாமேல் உள்ள நம்பிக்கை வெளிப்பட்டது.

‘வால்மீகி’ :பிக்பாக்கெட் பற்றிய கதை


கோணார் தமிழுரையைக் காட்டிலும் தெளிவாக இருக்கிறது சினிமா பற்றிய அனந்தநாராயணனின் பார்வை. விகடன் டாக்கீஸ் நிறுவனத்திற்காக ‘வால்மிகி’ படத்தை இயக்கிவரும் இவர், ஷங்கரின் மாணவர்.
முதலில் இந்த கதையை லிங்குசாமிதான் தயாரிப்பதாக இருந்ததாம். அதுமுடியாமல் போகவே படத்தின் கதையை கேட்ட ஒளிப்பதிவாளர் அழகப்பன், கதை சூப்பரா இருக்கு நானே தயாரிக்கிறேன்னு சொன்னாராம். அதே நேரத்தில் விகடன் டாக்கீஸ், அனந்த நாராயணணுக்கு அட்வான்ஸ் கொடுக்க, படம் இப்போ பாடல் வெளியீட்டு விழாவரை வளர்ந்துள்ளது.
“நாம எல்லோருக்குமே பிக்பாக்கெட் பசங்களோட சின்னதாவது ஒரு பரிட்சயம் இருக்கும். உங்ககிட்டயிருந்து பணத்தை அடிச்சியிருக்கலாம். அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது செய்தியிலாவது படிச்சிருக்கலாம். ஏதோ ஒரு வகையில் நமக்கு அந்த பசங்களோட பாதிப்பு இருக்கும். அவங்க உலகம் ரொம்ப மூர்க்கமானது.
அந்த வாழ்க்கையின் நியாய அநியாயங்கள் அத்தனையையும் எந்த சினிமா சாயமும் இல்லாம உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கோம். ஒரு இயக்குனரோட வேலை கதை ரெடி பண்ணி தயாரிப்பாளர் ஓ.கே சொல்வதுடன் 50 சதவிதம் முடிந்துவிடுகிறது. மீதம் 50 சதவீதம், நடிகர்கள், டெக்னீஷியன்களோட உழைப்புதான் பூர்த்திபண்ணும். படத்துக்கு இசைஞானிதான் இசை என்பதில் ஆரம்பத்திலிருந்தே உறுதியா இருந்தேன். கதையை கேட்டுட்டு அவரும் சம்மதித்ததால் எனது விருப்பம் நிறைவேறிருக்கு. மலையாளத்தில் பெரிய ஜாம்பவான்களோட படத்துல ஒளிப்பதிவு செய்துள்ள அழகப்பன் சார் ஒளிப்பதிவு செய்திருக்கார்.
’கல்லூரி‘அகில்தான் பிக்பாக்கெட் பையனா நடித்திருக்கிறார். மீரா நந்தன், தேவிகான்னு ரெண்டு நாயகிகள். இந்த மூனு பேருமே பிரமாதமா பண்ணியிருக்காங்க. இயல்பை சிதைக்காத முகங்கள் வேண்டும் என்பதற்காக ரோட்ல நடந்து போனவங்களையெல்லாம் கூப்பிட்டு நடிக்க வைத்திருக்கேன். எதார்த்த நடிப்பும், நேர்மையான உழைப்பும் கலந்துதான் படம் உருவாகியிருக்கு” என்றார் இயக்குனர் அனந்த நாராயணன்.

அனுஷ்காவின் அழகு படங்கள்











ஹாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான்


இடதில் ஒன்றும் வலதில் ஒன்றுமாக ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கார்களை வென்றபோது இசைப்புயலை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் வியந்து பார்த்தனர். வியப்பின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், இன்னொரு இனிப்பு செய்தியை தந்திருக்கிரார் ரஹ்மான்.
இந்திய சினிமாவில் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இன்றைய தேதியில் இசைப்புயலின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் ஹாலிவுட் இயக்குனர்களும் நிறைய. வாய்ப்புக்களை நிதானமாக தேர்வு செய்வதில் கெட்டிக்காரரான ரஹ்மான், யுனிவர்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் இசையமைக்க சம்மதித்துள்ளார்.
‘கபல்ஸ் ரீட்ரிட்’ என்னும் அந்த படத்திற்கு இசையமைக்க கோடி ரூபாய் சம்பளத்திற்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். காதலும், காமெடியும் கலந்த இப்படத்தை பீட்டர் பில்லெங்ஸிலி இயக்குகிறார். இப்படத்தில் மெலடி இசையை அமைக்கவேண்டும் என விரும்புகிறாராம். இவ்வாண்டு இறுதியில் படம் வெளியாகிறது.

புதன், 20 மே, 2009

சார்லஸ் ஆண்டனியாக நடிக்கும் சிம்பு


உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சோகக் கொள்ளியை கொதிக்க கொதிக்க கொட்டி வருகிறது புலிகள் பற்றிய செய்திகள். பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் உயிருடன் இருக்கிறார் என்பதான முரண்பட்ட செய்திகளில் இரண்டாவது உண்மையாக இருக்காதா என ஏங்குகிறது மனிதாபிமானிகளின் மனசு.

இதற்கும் சிம்பு பட செய்திக்கும் என்ன தொடர்பு? என கேட்பவர்கள் தொடர்க செய்தியை...

கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது சிம்பு நடித்து வரும் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' இதில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அடுத்து தான் இயக்கி நடிக்கவுள்ள படத்திற்கு தயாராகிவிட்டார் சிம்பு. படத்துக்கு 'வாலிபன்' என பெயரிடப்பட்டுள்ளது.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரி்ககும் இப்படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடம். இதில் ஒரு கேரக்டரின் பெயர் சார்லஸ் ஆண்டனி. அதாவது சமீபத்தில் வீரமரணமடைந்த பிரபாகரனின் மகனின் இறப்பு பாதித்ததால் படத்தில் தனது கேரக்டர் பெயரை அவ்வாறு வைத்துள்ளாராம். சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறாராம். இதுதவிர இரண்டாவது கதாநாயகிக்கான தேர்வும் நடந்துவருவதாக தயாரி்ப்பு தரப்பில் சொல்லப்பட்டது.

இயேசு நாதரும் பிரபாகரனும்


ஏற்கனவே மூன்று முறை பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறிவிட்ட ஊடகங்கள், இலங்கையின் புழுகை நம்பி நான்காவது முறையாக அவர் இறந்துவிட்டதாக கூறிவருகின்றன. இந்த நிமிடம்வரை அது உறுதிசெய்யப்படாத நிலையில் "தலைவர் மீண்டும் மக்கள் முன் தோன்றுவார்" என பிரபாகரனின் ஆதரவாளர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

உண்மையான பிரபாகரனின் தோற்றத்திற்கும் சடலத்துக்கும் உள்ள வேறுபாடுகளை புலிகள் தரப்பு சுட்டிக் காட்டியுள்ளதைப் பார்த்தால் நமக்கும் அது உண்மையாக இருக்கும் என தோன்றுகிறது. அவர்கள் எழுப்பும் சந்தேகங்கள்:-.

(i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது).

(ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்?

(iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது.

(iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற்கு மாறாக, நேற்று மதியம் 12 மணி அளவில் முல்லைத்தீவு நந்திக்கடல் கழிமுக பகுதியில் இருந்து உடலை கண்டுபிடித்ததாக அறிவித்து உள்ளது.

(v)தலையின் மேற்பகுதி மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

(vi)பிரபாகரனின் நாடி நடுவில் ஒரு வெட்டு உள்ளது போன்ற இரட்டை நாடி ஆகும். வீடியோ படத்தில் அப்படி இல்லை.

(vii)பிரபாகரனின் கை சற்று பருமனாக இருக்கும். இந்த படத்தில் அப்படி இல்லை.

(viii) இவற்றை எல்லாம் விட தலைவருக்கென்று சில அடையாளங்கள் உண்டு. புலிகளுக்கு என்றும் சில அடையாளங்கள் உண்டு. அவை யாதும் இதில் இல்லை. (அதுபற்றி நாங்கள் விளக்கமாக சொல்ல முடியாது.)

(ix)இறந்து பல மணி நேரம் ஆகியும் தண்ணீருக்குள் கிடந்த அவருடைய உடல் உப்பவில்லை. படத்தில் காண்பிக் கப்படுவதுபோல், தலையை பொம்மையை போல் அசைக்கமுடியாது என்று தடய அறிவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

(x)தலைவரின் முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ் டிக் சர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டு, அதை மறைக்க யூனிபார்மும், தலையில் துணியும், பாதி உடலும் என்று காட்டுகிறார்கள்.

மேற்கண்டது போன்ற பல சந்தேகங்களை விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளர்கள் எழுப்பி உள்ளனர்.

மேலும் கடந்த 1988-89-ம் ஆண்டில் இதேபோல் ஒரு முறை இறந்ததாக கூறப்பட்ட பிரபாகரன், 1990 இறுதிவரை 'இறந்தவரா'க இருந்ததால்தான் எம்மால் பின்னர் அவரை உயிருடன் காண முடிந்தது என்றும், அதுபோல இப்போது இறந்ததாக சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும் என்றும், தேவையான நேரத்தில் பிரபாகரன் மக்கள் முன் தோன்றுவார் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளனர்.

எதுஎப்படியோ பிரபாகரன் மீண்டும் உயிருடன் வந்தால் உயிர்த்தெழுந்த இயேசுநாதரைப்போல உலகத்திற்கு ஆச்சர்யம் அளிப்பது நிச்சயம்.

செவ்வாய், 19 மே, 2009

விவேக் ஓபராய்- சூர்யா நடிக்கும் இந்தி படம்


ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் அடுத்த ஸ்டெப்பை எடுத்துவைக்கிறார் சூர்யா. என்ன புரியலையா? பாலிவுட்டுக்கு போகப்போறாருங்க.

ஒவ்வொரு படத்திலும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது சூர்யாவின் கேரியர். இதோ இப்போகூட 'அயன்' ஹவுஸ்ஃபுல்லாக போய்க்கொண்டிருக்க, உற்சாகத்துடன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் 'ஆதவன்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அடுத்து ஹரி இயக்கும் 'சிங்கம்' படத்திற்காகவும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

அடுத்த கால்ஷீட்டிற்காக தமிழ் தயாரி்பபாளர்கள் தூண்டில் போட்டுவர, சூர்யாவுக்கு ராம்கோபால்வர்மா வலை வீசியுள்ளார் தாதாக்களின் நிழல் உலகையும், திகில் படங்களையும் இயக்குவதில் கெட்டிக்காரரான ராம்கோபால் வர்மா, அடுத்ததாக 'ஏக்த சரித்ரா' என்னும் படத்தை இயக்குகிறார்.

ஆந்திர மாநிலத்தில் பரிதாவா ரவி, மாட்டால் செருவு சூரி ஆகிய இரண்டு பிரபலங்களின் வாழ்ககையை மையமாக வைத்து உருவாகும் உண்மை கதையாம் இது. இதில் ரவி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடிக்க, சூரி வேடத்தில் சூர்யா நடிக்கிறாராம்.

சர்க்கரை செய்தி; தித்திப்பில் ஷாம்


தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், குடும்பத்தினர் என ஆளாளுக்கு இனிப்பை திணிக்க, அடையாறு ஆனந்தபவனின் மினியேச்சராகிவிட்டது ஷாமின் வாய். எல்லாம் நல்ல செய்திதான்.

கோலிவுட்டில் சராசரி வெற்றியை மட்டும் கண்டுவந்த ஷாமின் படம் தெலுங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறதாம். சுரேந்தர்ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜா, இலியானாவுடன் ஷாம் நடித்த 'கிக்' படம் கடந்த வாரம் ஆந்திர திரையரங்குகளில் பிரவேசம் செய்தது. முதல் நாளிலிருந்தே நல்ல ரிசல்ட் வர தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் மொய்க்க தொடங்கிவிட்டதாம். இன்றைய நிலவரப்படி ஷாம் படம்தான் முதலிடத்தில் இருக்கிறதாம்.

படப்பிடிப்பு நடந்தபோது ஷாம் காட்டிய டெடிகேஷனில் நெகிழ்ந்துபோன இயக்குனர், அடுத்த படத்திலும் சேர்ந்து கலக்குவோம் என வாக்களித்திருந்தாராம். படமும் இப்போ சக்கைப்போடு போட, கொடுத்தவாக்கை உடனே நிறைவேற்ற அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகிவிட்டாராம் இயக்குனர்.

'கிக்' கின் இரண்டாவது வார வசூல் தெலுங்கு தயாரிப்பாளர்களை பிரமிக்க வைக்க, பல தயாரி்ப்பாளர்களுக்கும் ஷாம் போதை ஏறியுள்ளதாம். தமிழில் ரஜினியுடன் இணைந்து மாவீரன் படத்தை தயாரி்த்த பத்மாலயா நிறுவனம் ஷாமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.

வெள்ளி, 15 மே, 2009

அசினுக்கும், ப்ரியாமணிக்கும் ஹீரோக்கள் கொடுத்த பரிசு


'லண்டன் ட்ரீம்ஸ்' படத்தில் சேர்ந்து நடிக்கும் சல்மானும், அசினும் லவ் பண்றாங்கனு கிளம்பிய கிசுகிசுக்கள் மும்பை பத்திரிகைகளின் பக்கங்கள் பலவற்றை நிரப்பியுள்ளன. "அப்படியெல்லாம் எதுவுமில்லை எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே" என அசின் முந்திக்கொண்டு மறுப்பு தெரிவித்ததெல்லாம் போன மாசம்.

இந்த மாச சேதி என்னவென்றால், அசின் பிறந்தநாளின் போது விலையுயர்ந்த நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்திருக்கிறாராம் சல்மான். அசினோட பிறந்தநாளின்போது அவருக்கு விருப்பமான ஒன்றை வாங்கிக்கொடுத்து அசத்திட வேண்டும் என்று நினைத்த சல்மான், யூனிட்டில் பணிபுரியும் ஒருவரை தூதனுப்பி அசினின் விருப்பத்தை தெரிந்துகொண்டு, இந்த அன்பு பரிசை கொடுக்க, இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனதாம் அசினின் மனசு.

அசின் டிராக்கிலேயே ப்ரியாமணி பற்றிய கிசுகிசுவும் பத்திரிகைகளுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. ப்ருத்விராஜ் பெயருக்கு பக்கத்தில் ப்ரியாமணி பெயரை எழுதிவந்த சினிமா நிருபர்கள், இப்போது, ப்ருத்விராஜ் இடத்தில் தருண் பெயரை எழுதி வருகின்றனர். 'நவ வசந்தம்' தெலுங்கு படத்தில் நடித்தபோதுதான் தருணின் நட்பு கிடைத்ததாம்.

ப்ரியாமணியின் 'தூய்மையான நட்புக்கு' அடையாளமாக அவருக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறாராம் தருண்.

ஒரு படத்தின் வெற்றிக்கு கலாச்சார பதிவு முக்கியம் : பாலுமகேந்திரா


பிராஜக்ட் ஈஸ்ட்வெஸ்ட்-ஏஎல் எல்சி தயாரிப்பில் அருண் வைத்யநாதன் இயக்கியுள்ள படம் 'அச்சமுண்டு அச்சமுண்டு'. பிரசன்னா-சினேகா நடித்துள்ள இப்படம் ரெட் ஒன் கேமிராவில் படமாக்கப்பட்ட முதல் சினிமா. கார்த்திக்ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது.

விழாவின் முக்கிய விருந்தினர் ஆஸ்கார் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டிதான். பாடல்களை ரசூல் பூக்குட்டி வெளியிட யுவன்சங்கர் ராஜா, பவதாரணி பெற்றுக்கொண்டனர். டிரைலரை பாலுமகேந்திரா வெளியிட நடிகர் நாசர், இயக்குனர் வெங்கட் பிரபு பெற்றுக்கொண்டனர்.

வெங்கட் பிரபு பேசியபோது, "கார்ததிக்ராஜாவை எல்லாருக்கும் இசையமைப்பாளர் என்றவரை மட்டும்தான் தெரியும். அவருக்குள் இயக்குனராகும் எண்ணமும் இருக்கிறது. அவர் வீடியோ படம் எடுத்தபோது அவரது முதல் நடிகன் நான்தான். நல்ல திறமைசாலியான அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனது படத்தில் விரைவில் அவர் பணியாற்றுவார்" என்றார்.

"அண்ணனுக்கு இதுவரை சரியான டீம் அமையவில்லை. அந்த டீம் இப்போது அமைந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் வெற்றிபெறுவார் என்று நம்புகிறேன்" என்றார் யுவன்சங்கர் ராஜா.

கடைசியாக பேசிய பாலுமகேந்திரா, "தமிழ் சினிமா இப்போது புதிய சி்ந்தனைகளுடன் சென்றுகொண்டிருக்கிறது. 25 வருடங்களுக்குமுன் புரட்சியை ஏற்படுத்தியது சிவப்பு சி்நதனை. இந்த படத்தின் படபிடிப்பு 'ரெட்' கேமிராவால் படமாக்கப்பட்டுள்ளது. படம் புரட்சி செய்யும் என்று நம்புகிறேன். டிரைலரையும், பாடலையும் பார்த்து வியந்துபோனேன்.

நவீன தொழில்நுட்பம் மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்கு காரணமாகிவிடாது. நல்ல கதையும் தேவை. கலாச்சாரத்தை பதிவு செய்யும் படங்கள் மட்டுமே உலக புகழ் பெற முடியும். அந்த வகையில் இப்போது வரும் தமிழ் சினிமாக்களில் கலாச்சார பதிவு வளர்ந்திருக்கிறது. அது சந்தோஷமான விஷயம். இன்னும் விட்டொழிக்கவேண்டிய விஷயங்களும் உள்ளது. தென்னாற்காடு, வடாற்காடு என்னும் வியாபார எல்லையை தாண்டி உலக சந்தை என்ற அளவிற்கு தமிழ் சினிமா வளரவேண்டும். கார்ததிக் ராஜா திறமை சாலி, அவரது 'டும் டும் டும்' படத்தின் இசைக்கு நான் ரசிகன்" என வாழ்த்தினார்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய இயக்குனர் அருண் வைத்யநாதன், ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள படங்களில் இந்தியாவிலிருந்து 'ஏ வெட்னஸ்டே', 'யாவரும் நலம்', 'அச்சமுண்டு அச்சமுண்டு' ஆகிய படங்கள் மட்டுமே திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள தகவலை தெரிவித்தார்.