வெள்ளி, 15 மே, 2009

ஒரு படத்தின் வெற்றிக்கு கலாச்சார பதிவு முக்கியம் : பாலுமகேந்திரா


பிராஜக்ட் ஈஸ்ட்வெஸ்ட்-ஏஎல் எல்சி தயாரிப்பில் அருண் வைத்யநாதன் இயக்கியுள்ள படம் 'அச்சமுண்டு அச்சமுண்டு'. பிரசன்னா-சினேகா நடித்துள்ள இப்படம் ரெட் ஒன் கேமிராவில் படமாக்கப்பட்ட முதல் சினிமா. கார்த்திக்ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது.

விழாவின் முக்கிய விருந்தினர் ஆஸ்கார் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டிதான். பாடல்களை ரசூல் பூக்குட்டி வெளியிட யுவன்சங்கர் ராஜா, பவதாரணி பெற்றுக்கொண்டனர். டிரைலரை பாலுமகேந்திரா வெளியிட நடிகர் நாசர், இயக்குனர் வெங்கட் பிரபு பெற்றுக்கொண்டனர்.

வெங்கட் பிரபு பேசியபோது, "கார்ததிக்ராஜாவை எல்லாருக்கும் இசையமைப்பாளர் என்றவரை மட்டும்தான் தெரியும். அவருக்குள் இயக்குனராகும் எண்ணமும் இருக்கிறது. அவர் வீடியோ படம் எடுத்தபோது அவரது முதல் நடிகன் நான்தான். நல்ல திறமைசாலியான அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனது படத்தில் விரைவில் அவர் பணியாற்றுவார்" என்றார்.

"அண்ணனுக்கு இதுவரை சரியான டீம் அமையவில்லை. அந்த டீம் இப்போது அமைந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் வெற்றிபெறுவார் என்று நம்புகிறேன்" என்றார் யுவன்சங்கர் ராஜா.

கடைசியாக பேசிய பாலுமகேந்திரா, "தமிழ் சினிமா இப்போது புதிய சி்ந்தனைகளுடன் சென்றுகொண்டிருக்கிறது. 25 வருடங்களுக்குமுன் புரட்சியை ஏற்படுத்தியது சிவப்பு சி்நதனை. இந்த படத்தின் படபிடிப்பு 'ரெட்' கேமிராவால் படமாக்கப்பட்டுள்ளது. படம் புரட்சி செய்யும் என்று நம்புகிறேன். டிரைலரையும், பாடலையும் பார்த்து வியந்துபோனேன்.

நவீன தொழில்நுட்பம் மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்கு காரணமாகிவிடாது. நல்ல கதையும் தேவை. கலாச்சாரத்தை பதிவு செய்யும் படங்கள் மட்டுமே உலக புகழ் பெற முடியும். அந்த வகையில் இப்போது வரும் தமிழ் சினிமாக்களில் கலாச்சார பதிவு வளர்ந்திருக்கிறது. அது சந்தோஷமான விஷயம். இன்னும் விட்டொழிக்கவேண்டிய விஷயங்களும் உள்ளது. தென்னாற்காடு, வடாற்காடு என்னும் வியாபார எல்லையை தாண்டி உலக சந்தை என்ற அளவிற்கு தமிழ் சினிமா வளரவேண்டும். கார்ததிக் ராஜா திறமை சாலி, அவரது 'டும் டும் டும்' படத்தின் இசைக்கு நான் ரசிகன்" என வாழ்த்தினார்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய இயக்குனர் அருண் வைத்யநாதன், ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள படங்களில் இந்தியாவிலிருந்து 'ஏ வெட்னஸ்டே', 'யாவரும் நலம்', 'அச்சமுண்டு அச்சமுண்டு' ஆகிய படங்கள் மட்டுமே திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள தகவலை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக