வெள்ளி, 22 மே, 2009

‘வால்மீகி’ :பிக்பாக்கெட் பற்றிய கதை


கோணார் தமிழுரையைக் காட்டிலும் தெளிவாக இருக்கிறது சினிமா பற்றிய அனந்தநாராயணனின் பார்வை. விகடன் டாக்கீஸ் நிறுவனத்திற்காக ‘வால்மிகி’ படத்தை இயக்கிவரும் இவர், ஷங்கரின் மாணவர்.
முதலில் இந்த கதையை லிங்குசாமிதான் தயாரிப்பதாக இருந்ததாம். அதுமுடியாமல் போகவே படத்தின் கதையை கேட்ட ஒளிப்பதிவாளர் அழகப்பன், கதை சூப்பரா இருக்கு நானே தயாரிக்கிறேன்னு சொன்னாராம். அதே நேரத்தில் விகடன் டாக்கீஸ், அனந்த நாராயணணுக்கு அட்வான்ஸ் கொடுக்க, படம் இப்போ பாடல் வெளியீட்டு விழாவரை வளர்ந்துள்ளது.
“நாம எல்லோருக்குமே பிக்பாக்கெட் பசங்களோட சின்னதாவது ஒரு பரிட்சயம் இருக்கும். உங்ககிட்டயிருந்து பணத்தை அடிச்சியிருக்கலாம். அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது செய்தியிலாவது படிச்சிருக்கலாம். ஏதோ ஒரு வகையில் நமக்கு அந்த பசங்களோட பாதிப்பு இருக்கும். அவங்க உலகம் ரொம்ப மூர்க்கமானது.
அந்த வாழ்க்கையின் நியாய அநியாயங்கள் அத்தனையையும் எந்த சினிமா சாயமும் இல்லாம உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கோம். ஒரு இயக்குனரோட வேலை கதை ரெடி பண்ணி தயாரிப்பாளர் ஓ.கே சொல்வதுடன் 50 சதவிதம் முடிந்துவிடுகிறது. மீதம் 50 சதவீதம், நடிகர்கள், டெக்னீஷியன்களோட உழைப்புதான் பூர்த்திபண்ணும். படத்துக்கு இசைஞானிதான் இசை என்பதில் ஆரம்பத்திலிருந்தே உறுதியா இருந்தேன். கதையை கேட்டுட்டு அவரும் சம்மதித்ததால் எனது விருப்பம் நிறைவேறிருக்கு. மலையாளத்தில் பெரிய ஜாம்பவான்களோட படத்துல ஒளிப்பதிவு செய்துள்ள அழகப்பன் சார் ஒளிப்பதிவு செய்திருக்கார்.
’கல்லூரி‘அகில்தான் பிக்பாக்கெட் பையனா நடித்திருக்கிறார். மீரா நந்தன், தேவிகான்னு ரெண்டு நாயகிகள். இந்த மூனு பேருமே பிரமாதமா பண்ணியிருக்காங்க. இயல்பை சிதைக்காத முகங்கள் வேண்டும் என்பதற்காக ரோட்ல நடந்து போனவங்களையெல்லாம் கூப்பிட்டு நடிக்க வைத்திருக்கேன். எதார்த்த நடிப்பும், நேர்மையான உழைப்பும் கலந்துதான் படம் உருவாகியிருக்கு” என்றார் இயக்குனர் அனந்த நாராயணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக