புதன், 15 ஏப்ரல், 2009

’கார்த்திக்-அனிதா’ விமர்சனம்


கண்ணாமூச்சி காட்டும் பழைய காதல்கதைதான் என்றாலும் காதில் பூ சுற்றாத இயல்பான, இதமான காட்சியமைப்புகளால் கார்த்திக்-அனிதாவிற்கு பாஸ் மார்க் போடவைத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீஹரி.

எதிரெதிர் வீடு, ஒரே கல்லூரி,சின்ன வயசிலிருந்தே தொடரும் நட்பு என நெருங்கியே இருந்தாலும், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் எலியும் பூனையுமாக பிராண்டிக்கொண்டே இருக்கும் கேரக்டர்கள்தான் நாயகனும் நாயகியும். இது எங்க போய் முடியுமோ என எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், காதலில் விழுகிறது நாயகியின் மனசு. அவனின் செயல்களும் நினைவுகளும் அவளுக்குள் பஞ்சாமிர்தமாக இனிக்க,ஒரு சூழலில் சுழலுக்குள் சிக்கிய பொருளாய் வட்டமடிக்கிறது இவளது ஒருதலைக்காதல்.

தன் மனசை புரிந்துகொள்ளாமல் அவன் பரிகசிக்கும் நேரத்தில் வேறொரு பையனுடன் நிச்சயமாகிறது. இம்முறை அவனுக்குள்ளும் காதல் உருவாக, அதனை கைகூடவைக்காத சூழல் வில்லனாக நிற்க, அதற்கு அழகான விடைசொல்லும் க்ளைமாக்ஸும் அழகு.


புதுமுகங்கள் என்றாலும் இது முகங்கள் என டி.ஆர் பாணியில் பாராட்டவைக்கின்றனர் ரத்தனும் மஞ்சுவும். நாயகியை வெறுப்பேற்ற செய்யும் ரகளையில் கலகலப்பு காட்டும் ரத்தன், ஒரே ஆதரவாக இருந்த அப்பா இறந்த பிறகு வரவழைத்துக்கொள்ளும் சோகத்தை எல்லை மீறாமல் வெளிப்படுத்தும் விதத்தில் பக்குவப்பட்ட நடிகராக பாராட்டை பெருகிறார்.

ஈஸ்வரிராவின் சாயலில் இருக்கும் மஞ்சுவின் முகம் பார்டரில் பாஸானாலும் நடிப்பிற்கு தாராளமாக தரலாம் நூற்றுக்கு நூறு. அவன் தனக்கில்லை என தெரிந்த பிறகும் பால்ய காலம்முதல் தொடர்ந்த பாசத்தை கடைசிவரை பரிமாறும்போது திரையிலிருந்து நம் இதயத்திலும் இடம் மாறுகிறார்.

யேய்.. ஊய்... என்று ஹீரோக்களுக்கு எதிராக உறுமிக்கொண்டிருந்த கோட்டா சீனிவாசராவும், ராஜன் பி.தேவும் இப்படியும் நடிக்கலாம் என பிற இயக்குனர்களுக்கு டியூசன் எடுப்பதுபோல அவர்களின் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் இயக்குனரின் மாற்று சிந்தனைக்கும் மனசை பறிகொடுக்கலாம்.

ஹீரோவின் டூப்ளிகேட் தந்தையாக வரும் பப்பு கேரக்டர், காலேஜ் பிரின்ஸிபல் எதிரே அமர்ந்துகொண்டு அரங்கேற்றும் லூசுத்தனத்தில் சிரித்து சிரித்து விலா எலும்புகளும் லூசாகும் உணர்வு.

ஜேக் ஆனந்தின் இசையில் ‘தட தட ரயில் அழகு...’ பாடல் உள்ளம் மயக்கினால் கே.ஜி.சங்கரின் உறுத்தாத ஒளிப்பதிவும் விழிகளுக்கு விருந்தாகிறது.

நாயகனின் காதலுக்கு சாட்சியாக இருக்கும் ரூபாய் நோட்டை வைத்து லப்டப்பை எகிறவைக்க நடத்தும் கண்ணாமூச்சில் மட்டும் பழைய செயற்கை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் புது ஐடியா ஒன்றை பிடித்திருக்கலாம். இருப்பினும் அதனையும் பிடிக்கிறமாதிரி செய்திருப்பதால் இயக்குனரின் திறமை பிடிக்கவே செய்கிறது.

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

அரசியல் வேணாம் : ரஜினி, அப்பா வருவார் : சௌந்தர்யா


வருவாரா மாட்டாரா.... ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஓட்டப்பட்டு வரும் இந்த குழப்ப குதிரை இன்னும் நின்றபாடில்லை. அரசியல் கேள்விகளுக்கு இதுவரை ரஜினி மட்டுமே பதில் சொல்லி வந்த நிலையில் அவரது மகள் சௌந்தர்யாவும் தன் பங்குக்கு கருத்துக்களை பகிர்ந்துகொள்ள துணிந்துவிட்டார்.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சௌந்தர்யா, வெங்கட்பிரபு இயக்கும் கோவா படத்தை தயாரித்துவருகிறார். படத்தின் லொகேஷனான தேனிக்கு சமீபத்தில் விசிட் அடித்தார் சௌந்தர்யா. விஷயத்தை மோப்பம் பிடித்த ஒரு வார இதழின் நிருபர், ரெக்கார்டரும் கையுமாக சௌந்தர்யா முன் ஆஜராகிவிட்டார்.

வெங்கட் பிரபுவின் நட்பு, கோவா கதைன்னு போய்க்கொண்டிருந்த பேட்டியில், திடீரென அரசியல் கேள்வியையும் நுழைத்தார் நிருபர். நீங்க அரசியலுக்கு வருவீங்களா?

கேள்வியை கேட்டதும் சௌந்தர்யா ஷாக்காகிப்போயிரு்பபார் என்று நீங்க நினைத்தால் அது தவறு. இதுவரை மீடியாக்களில் சொல்லாத ஒரு தகவலை மனந்திறந்து கொட்டியிருக்கிறார் சௌந்தர்யா அது....

"நான் பாலிடிக்ஸ்ல என்ன நடக்குதுன்னு தினம் ஃபாலோ பண்ணுவேன். எல்லா நியூஸூம் தெரியும். அப்பாவோட நிறைய அரசியல் பேசியிருக்கிறேன். இரண்டு பேருக்கும் அரசியல்ல நிறைய ஐடியாஸ் உண்டு. கிராபிக்ஸ்ல இருந்து சினிமா தயாரிப்புவரை வந்தாச்சு. கண்டிப்பா அரசியலுக்கும் வருவோம். 'அப்பா அரசியலுக்கு வரணும்னு நாங்க சொல்றோம்' அப்பா எப்பவுமே 'மக்களுக்கு நல்லது பண்ணனும், மக்கள் விரும்புறதைச் செய்யணும்'னு சொல்வார். சீக்கிரம் கடவுள் கிருஷ்ணா ஆசியோடு நல்லது பண்ண வருவார்".

சௌந்தர்யா இப்படி சொல்லியிருக்க, 'அசல்' விழாவில் பேட்டியளித்த ரஜினி மீண்டும் தனது பழைய பதிலை தந்திருக்கிறார்.

சிரஞ்சீவிபோல நீங்களும் அரசியலுக்கு வருவீங்களா?

நோ...நோ... பாலிடிக்ஸ். "அரசியலுக்கு வரும் எண்ணமில்லை அதுபற்றி கேள்வி எதுவும் கேட்காதீங்க என 50 டிகிரி அளவுக்கு டென்ஷனை வெளிப்படுத்தி விடைபெற்றுக்கொண்டார்".

புதன், 1 ஏப்ரல், 2009

பறக்கும் விக்ரம்; பரவச டிரைலர்


'எழுதி வைத்துக்கொள்ளுங்கள்,கந்தசாமி வரலாறு படைக்கப்போகிறான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக நடத்தப்பட்ட பிரஸ்மீட்டில்தான் இப்படி சத்தியம் செய்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தானு.

எல்லா சினிமா பங்க்ஷனிலும் இப்படி சொல்வது வழக்கம்தானே என அசால்டாக இருக்கமுடியவில்லை. காரணம் கந்தசாமி டிரைலர். 'எத்தனை நாள் ஏக்கம்... இப்படியொரு ஹீரோவுக்காக' என்ற வாசகங்களின் பின்னணியில் ஸ்பைடர் மேன் ரேஞ்சுக்கு விக்ரம் திரையில் பாய்வதை பார்த்தபோது யேய் யப்பா... என பிரமித்துப்போனோம்.

"வரும் 14-ம் தேதி பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்ட திருவிழாபோல் நடத்தப்போகிறோம். படத்தில் நடனமாடியுள்ள இத்தாலி கலைஞர்களே ஆடியோ விழா மேடையிலும் நேரடியாக நடனமாடப்போகிறார்கள். படத்தின் தொடக்கவிழாவின்போது, இரண்டு கிராமங்களை தத்தெடுக்கப்போவதாக அறிவித்தோம். அந்த திட்டம் இப்போது 30 கிராமமாக உயர்ந்துள்ளது. பாடல் வெளியீட்டு விழாவில் தத்தெடுக்கப்படவுள்ள கிராமத்தை தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் நடக்கும்.

இன்னியோடு சூட்டிங் முடிந்துவிட்டது. படம் வெளிவந்த பிறகு விக்ரம் சூப்பர் ஹீரோவாக நம்பர் ஒன் இடத்தில் இருப்பார், அதேபோல கேமிராமேன் ஏகாம்பரம், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகிய டெக்னீசியன்களும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பார்கள். அப்படியொரு உழைப்பையும் தரத்தையும் கந்தசாமியில் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளராகதானுவுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. வெள்ளிவிழா ஆண்டில் மெகா வெற்றி படத்தை தரப்போகிறேன் என்ற சந்தோஷம் எனக்குள் இருக்கு" என இயக்குனர் சுசி சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் நம்புவதை தவிர வேறுவழி. அப்படியொரு டிரைலர் கட்டிங்கை நான்குவிதமாக பார்க்கமுடிந்தது.

பாடலாசிரியர் விவேகா பேசும்போது, "இவ்வளவு பெரிய படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி கூறுகிறேன். சுசியை திருப்திபடுத்துவது அவ்வளவு சுலபமல்ல என்றார்கள் அது உண்மைதான்" என உட்கார நினைத்த விவேகாவை மீண்டும் மைக்முன் நிறுத்திய சுசிகணேசன், "இந்த படத்துல ஒரு பாடலையும் விவேகா பாடியுள்ளார்" என்ற தகவலை சொன்னார்.

அடுத்து பேச வந்தவர்களும் சுசியை திருப்திபடுத்துவது சுலபமல்ல என்பதையே சொல்ல, மைக்கை பிடித்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், "எல்லா படத்துக்கும் ஒரு கேப்ஷன் கொடுப்பதைபோல இந்தப் படத்தின் தலைப்புக்கு கீழும் 'சுசியை திருப்திபடுத்துவது சுலபமல்ல' என்ற கேப்ஷன் போடலாம்" என கமெண்ட் அடிக்க, பிரஸ்காரர்களே கைதட்டி ரசித்தனர்.

"எங்களையெல்லாம் ரொம்பவே வாட்டியெடு்ததுட்டாரு சுசி. ஆனா இப்போ டிரைலரை பார்க்கும்போது என்னை நானே ஆச்சர்யமாக பார்க்கிறேன். அந்த அளவுக்கு சுசிகணேசனின் உழைப்பும் திறமையும் இருக்கிறது. பேசாம 'கந்தசாமி' என்பதற்கு பதில் 'சுசிசாமி' என்றுகூட பெயர் வைக்கலாம்" என்றார் விக்ரம்.