புதன், 15 ஏப்ரல், 2009

’கார்த்திக்-அனிதா’ விமர்சனம்


கண்ணாமூச்சி காட்டும் பழைய காதல்கதைதான் என்றாலும் காதில் பூ சுற்றாத இயல்பான, இதமான காட்சியமைப்புகளால் கார்த்திக்-அனிதாவிற்கு பாஸ் மார்க் போடவைத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீஹரி.

எதிரெதிர் வீடு, ஒரே கல்லூரி,சின்ன வயசிலிருந்தே தொடரும் நட்பு என நெருங்கியே இருந்தாலும், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் எலியும் பூனையுமாக பிராண்டிக்கொண்டே இருக்கும் கேரக்டர்கள்தான் நாயகனும் நாயகியும். இது எங்க போய் முடியுமோ என எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், காதலில் விழுகிறது நாயகியின் மனசு. அவனின் செயல்களும் நினைவுகளும் அவளுக்குள் பஞ்சாமிர்தமாக இனிக்க,ஒரு சூழலில் சுழலுக்குள் சிக்கிய பொருளாய் வட்டமடிக்கிறது இவளது ஒருதலைக்காதல்.

தன் மனசை புரிந்துகொள்ளாமல் அவன் பரிகசிக்கும் நேரத்தில் வேறொரு பையனுடன் நிச்சயமாகிறது. இம்முறை அவனுக்குள்ளும் காதல் உருவாக, அதனை கைகூடவைக்காத சூழல் வில்லனாக நிற்க, அதற்கு அழகான விடைசொல்லும் க்ளைமாக்ஸும் அழகு.


புதுமுகங்கள் என்றாலும் இது முகங்கள் என டி.ஆர் பாணியில் பாராட்டவைக்கின்றனர் ரத்தனும் மஞ்சுவும். நாயகியை வெறுப்பேற்ற செய்யும் ரகளையில் கலகலப்பு காட்டும் ரத்தன், ஒரே ஆதரவாக இருந்த அப்பா இறந்த பிறகு வரவழைத்துக்கொள்ளும் சோகத்தை எல்லை மீறாமல் வெளிப்படுத்தும் விதத்தில் பக்குவப்பட்ட நடிகராக பாராட்டை பெருகிறார்.

ஈஸ்வரிராவின் சாயலில் இருக்கும் மஞ்சுவின் முகம் பார்டரில் பாஸானாலும் நடிப்பிற்கு தாராளமாக தரலாம் நூற்றுக்கு நூறு. அவன் தனக்கில்லை என தெரிந்த பிறகும் பால்ய காலம்முதல் தொடர்ந்த பாசத்தை கடைசிவரை பரிமாறும்போது திரையிலிருந்து நம் இதயத்திலும் இடம் மாறுகிறார்.

யேய்.. ஊய்... என்று ஹீரோக்களுக்கு எதிராக உறுமிக்கொண்டிருந்த கோட்டா சீனிவாசராவும், ராஜன் பி.தேவும் இப்படியும் நடிக்கலாம் என பிற இயக்குனர்களுக்கு டியூசன் எடுப்பதுபோல அவர்களின் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் இயக்குனரின் மாற்று சிந்தனைக்கும் மனசை பறிகொடுக்கலாம்.

ஹீரோவின் டூப்ளிகேட் தந்தையாக வரும் பப்பு கேரக்டர், காலேஜ் பிரின்ஸிபல் எதிரே அமர்ந்துகொண்டு அரங்கேற்றும் லூசுத்தனத்தில் சிரித்து சிரித்து விலா எலும்புகளும் லூசாகும் உணர்வு.

ஜேக் ஆனந்தின் இசையில் ‘தட தட ரயில் அழகு...’ பாடல் உள்ளம் மயக்கினால் கே.ஜி.சங்கரின் உறுத்தாத ஒளிப்பதிவும் விழிகளுக்கு விருந்தாகிறது.

நாயகனின் காதலுக்கு சாட்சியாக இருக்கும் ரூபாய் நோட்டை வைத்து லப்டப்பை எகிறவைக்க நடத்தும் கண்ணாமூச்சில் மட்டும் பழைய செயற்கை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் புது ஐடியா ஒன்றை பிடித்திருக்கலாம். இருப்பினும் அதனையும் பிடிக்கிறமாதிரி செய்திருப்பதால் இயக்குனரின் திறமை பிடிக்கவே செய்கிறது.

2 கருத்துகள்: