சனி, 28 மார்ச், 2009

பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்'


கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஞாபகங்கள்'. அப்போ ‘தாய்க்காவியம்' என்னாச்சுன்னு ஞாபகமா கேட்காம, புது படத்தோட செய்திய மட்டும் கேளுங்க!

வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பா.விஜய் கதை,வசனம்,பாடல் எழுதி தயாரிக்கும் படம்தான்'ஞாபகங்கள்'. இவருக்கு ஜோடியா ஸ்ரீதேவிகா நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஜீவன்.

வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனுஷனுக்கும் மறக்கமுடியாத சில நினைவுகள் மனசுக்குள் நங்கூரம் பாய்ச்சிக்கொண்டிருக்கும். அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாத அந்த ஞாபகங்களின் தொகுப்பே இப்படத்தின் கதையாம்.

சென்னையின் பல இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த கையோடு, ஊட்டி,கோவை, கோபிசெட்டிப்பாளையம்,மதுரை ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்களாம்.

நதியாவின் நீண்டநாள் ஆசை


காஷ்மீர்ல குளிர் போகுமா? எவரஸ்டின் உயரம் குறையுமா? அதுமாதிரிதான் நதியாவின் இளமையும் அப்படியே இருக்கிறது. சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவரை மீண்டும் தரிசனம் தரவைத்த இயக்குனர் எம்.ராஜாவுக்கு நன்றி.

நல்ல கதைகளுக்கு மட்டுமே கால்ஷீட். இதுதான் நதியாவின் பாலிசி. அந்த வகையில் அவர் தற்போது நடித்து வெளிவந்துள்ள படம் ‘பட்டாளம்'. அப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டபோது...

”இது செம ஜாலியான படம். பள்ளி தாளாளராக நடித்துள்ளேன். இந்த கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் முக்கியமான கதை. சின்ன பசங்களுடன் சேர்ந்து நடித்த அனுபவம் புதுசா இருந்தது. ஆரம்பத்தில் நான் சீனியர் நடிகை என பயந்து யாரும் என்னிடம் பேசவில்லை. சில நாட்களில் ரொம்ப நெருக்கமாகிவிட்டோம். பத்ரிகையாளர்கள் போலவே அவர்களும் நான் அழகாக இருப்பதாக கூறி என் இளமையின் ரகசியம் என்ன என்று கேட்டார்கள்.

‘என்னை சுற்றியிருக்கும் நல்லவர்களும், தினமும் செய்துவரும் யோகாவும்தான் அதற்கு காரணம்' என கூறினேன். யோகா உடம்பை மட்டுமின்றி சிந்தனையையும் வளப்படுத்துகிறது.” யோகா ஆசிரியர் போல பேச ஆரம்பித்த நதியாவிடம் அவர் நடிக்கவிரும்பும் கதாபாத்திரம் பற்றி கேட்டோம்.

“நல்ல நல்ல கேரக்டர்கள் பண்ணிவிட்டேன். ஆனால் ரொம்ப நாளாகவே ஒரு நிறைவேறாத ஆசை மனசுக்குள் இருக்கிறது. முழுநீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. அப்படியான கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.”

செவ்வாய், 24 மார்ச், 2009

’பசங்க’படங்கள்












மகனுடன் ஆட்டம் போட்ட விஜய்


இருபது வருடங்களுக்கு முந்தைய எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் ஒல்லியான உருவத்துடன் ஏழை மாணவனாக ஒன்றிரண்டு சீன்களில் தலைக்காட்டியவர்தான் விஜய். இவர்தான் இளையதளபதியாக பின்னாளில் விஷ்வரூபம் எடுக்கப்போகிறார் என்பது தெரியாது.

இப்போது இந்த பிளாஸ்பேக்கிற்கு அவசியமென்ன என்கிறீர்களா? அவசியம் இருக்கு. இளமை காலத்தில் விஜய்யின் ஒரு சீன் தரிசனம் போலவே அவரது மகனும் நடிக்கத் தொடங்கிவிட்டார். யெஸ். வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் மகன் ஜேஷன் சஞ்சய் நடிக்கிறார்.

ஏவிஎம் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கிவரும் 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன் ராஜமுந்திரியில் தொடங்கியது. படத்தில் இடம்பெறும் ஓபனிங் பாடலுக்காக விஜய்யுடன் இணைந்து 100 நடனக்கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். மாஸ்டர் ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

இதில் விஜய்யுடன் ஒரு சிறுவனும் ஆடினால் நன்றாக இருக்கும் என ஷோபி விரும்பியபோது, அதனாலென்ன, எம் பையனையே ஆடவச்சிடுறேன் என்ற விஜய், அடுத்த நாளே மகனை ஸ்பாட்டிற்கு அழைத்துவர மகனுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா அப்பாவை போலவே பிரமாதமாக ஸ்டெப் போட்டு அசத்திவிட்டாராம் சஞ்சய்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் மகனுக்கு தானே நடனம் பயிற்சி அளித்து வந்தாராம் விஜய்.

அப்படியே நடிப்பையும் கத்துக்கொடுத்தீட்டீங்கனா, குட்டி இளையதளபதிக்கு கட்அவுட் வைக்க தயாராகிவிடுவர் ரசிகர்கள்.

திங்கள், 23 மார்ச், 2009

தெலுங்கில் ஆர்யாவுக்கு வில்லன் வேஷம்


தமிழில் தனது கால்ஷீட்டை அள்ளிக்கொடுப்பதோடு தெலுங்கு இயக்குனர்களுக்கும் கிள்ளிக்கொடுக்க ஆரம்பித்துள்ளார் ஆர்யா. 'நான் கடவுள்' தெலுங்கில் 'நேனு தேவுட்னி' பெயரில் வெளியாக அங்கும் சூப்பர் ரெஸ்பான்ஸாம். ஆந்திர இயக்குனர்களின் பார்வையும் ஆர்யா மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க அழைத்துள்ளனர். ஆர்யாவும் ஓ.கே. சொல்லிவிட்டார். இப்படத்தை இயக்குவது குணசேகர். ஆர்யாவை ஒப்பந்தம் செய்தது பற்றி அவர் கூறும்போது, "நான் கடவுளில் ஆர்யாவின் நடிப்பை பார்த்து மிரண்டு போனவர்களில் நானும் ஒருவன். எனது படத்தில் வில்லன் வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்தோம். வில்லன் என்றாலும் கதாநாயகனுக்கு சமமான கேரக்டர்தான் ஆர்யாவிற்கு" என்றார்.

இன்றிலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகிறதாம்.

பாபர்மசூதி கலவரமும் தடுமாறும் காதலர்களும்


ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னனியை குப்பி என்ற பெயரில் இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். அதில் அவர் கையாண்டிருந்த தத்ரூப இயக்கம், இவரது அடுத்த படம் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை தூண்டியது. வீரப்பனின் கதையை படமாக்கும் முயற்சியில் இருந்த ரமேஷ், அந்த முயற்சியை தள்ளிவைத்துவிட்டு, வேறொரு படத்தை ஆரம்பித்துவிட்டார்.

போலீஸ் குவார்ட்டர்ஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதே. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட கலவரம், பெங்களூர் போலீஸ் குவார்ட்டர்ஸில் இருந்த காதலர்களை பாதித்த உண்மை சம்பவத்தை அச்சு அசலாக தரப்போகிறாராம். ஒரே நேரத்தில் கன்னடம், தமிழில் உருவாகவுள்ளது. தமிழில் 'காவலர் குடியிருப்பு' என பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது.

வஷிஸ்டா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இந்துமதி அனிதா தயாரி்ககும் இப்படத்தின் நாயகனாக அனீஸ் தேஜேஸ்வர் நடிக்க, நாயகியாக புதுமுகம் சோனு அறிமுகமாகிறார். மாஸ்டர் சரண், அவினாஸ், சரண்யா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

வரும் 27-ந் தேதி பெங்களூர் பசவனாகுடியில் உள்ள கணபதி கோயிலில் படத்தின் தொடக்கவிழா நடக்கிறது. இவ்விழாவில் பெங்களூரில் உள்ள மொத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளது விழாவின் சிறப்பு.

சனி, 21 மார்ச், 2009

ரஜினியை குண்டாக்கிய ஆம்பூர் பிரியாணி


நினைத்தால் உசிலைமணி போலவும் நினைத்தால் ஓமக்குச்சி போலவும் மாறும் மேஜிக் உடம்புக்கு சொந்தக்காரர் கமல். ரஜினி ரசிகர்களைகூட பல நேரங்களில் மேடைபோட்டு பாராட்ட வைத்துவிடும் கமலின் கெட்டப் மாற்றம்.

இதுவரை இப்படியான முயற்சியில் ரஜினி இறங்கியதே கிடையாது. ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம் ஆகிய இரண்டு சமாச்சாரங்களுக்குள்ளாகவே வண்டியை ஓட்டி முடித்துவிடுவார். சமீபத்தில் அவரது வித்தியாசமான கெட்டப் என்று சொல்லப்போனால் 'சிவாஜி'யில் நடித்த மொட்டையை மட்டுமே சொல்லமுடியும்.

ரஜினியை இன்னொருமுறை வேறொரு கெட்டப்பில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இயக்குனர் ஷங்கர். எந்திரனில் அதனை நிறைவேற்றிக் காட்டவுள்ளார். ராஜூ சுந்தரம் நடன அமைப்பில் பெரு நாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய எந்திரன் டீம், அடுத்து லொகேஷன் மாற்றிய இடம் ஆம்பூர்.

அப்போதுதான் ஷங்கர் தனது ஐடியாவை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். அதாவது சில காட்சிகளில் ரஜினி குண்டாக தெரியவேண்டுமாம். குறைந்த பட்சம் இருபது கிலோ எடையாவது கூடியிருக்கவேண்டும் என ரஜினிக்கு சொல்லியுள்ளார். அதன்படி சைவ உணவை குறைத்துக்கொண்டு அசைவத்தை அதிகப்படுத்தியுள்ளாராம் ரஜினி.

மீண்டும் ஆம்பூருக்கு வருவோம். ஆம்பூர் படப்பிடிப்பின்போது அவ்வூர் பிரியாணிக்கு பெயர்போனதையறிந்த ரஜினி மதியம், இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் சுடச்சுட பிரியாணி வரவழைத்து சாப்பிட்டாராம். ஆம்பூரில் இருந்தவரை ரஜினி 5 கிலோ எடை கூடியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உருவாகும் தமிழ் படம்


இதயம் நல்லெண்ணெய், டாட்ஸ் அப்பளம் உட்பட விளம்பர பட உலகில் பிஸியாக இருப்பவர் லேகா ரத்னகுமார். ஜோதிகா, சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்களை விளம்பரங்களில் ஜொலிக்கவைத்த பெருமைக்கு சொந்தக்காரர். லேகா சொனாட்டான் இசை நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தலைவர்.

"உங்களுக்கு இருக்கிற கிரியேட்டிவிட்டிக்கு வெள்ளித்திரையில் ஒரு கை பார்க்கலாமேன்னு ரொம்ப நாளாவே நண்பர்கள் சைடிலிருந்து அன்பு வேண்டுகோள் வைக்கப்பட்டு வந்தது. எனக்கு அந்த ஐடியாவே இல்லாம இருந்தது. வடிவேலு பாணியில் சொல்றதா இருந்தா, இப்போ ஒரு நல்ல கதை சிக்கியிருக்கு. கேட்டதும் ஆஹா இத படமா எடுத்தா என்னன்னு... சினிமா ஆசை இல்லாம இருந்த எனக்குள்ள முதல் முறையா ஆசையை கிளப்பிய கதை இது. அதனால நண்பர்களின் நீண்ட நாள் வேண்டுகோளையும் எனது ஆசையையும் விரைவில் நிறைவேற்ற போறேன்" என ஆயத்தமான ரத்னகுமாரிடம் கதைப்பற்றி கேட்டோம்.

"சூப்பர் ரொமான்டிக் ஸ்டோரி. படத்துல சில சஸ்பென்சும் இருக்கு. படம் வெளிவரும்வரை அது சஸ்பென்ஸாகவே இருக்கும். 75 சதவீதம் அமெரிக்காவில்தான் படமாகிறது. குற்றாலம் பகுதியிலும் சில காட்சிகளை படமாக்கவுள்ளோம். அமெரிக்க நடிகர்-நடிகைகளும் படத்துல இருப்பாங்க. ஒவ்வொரு காட்சியும் ஓவியம் மாதிரி இருக்கும் என்பதற்கு கேரண்டி தர்றேன். இன்னும் டைட்டில் வைக்கல. முதல்ல குழந்தை பிறக்கட்டும் அப்புறமா பேரு வைக்கலாமேன்னு அந்த சைடு யோசிக்கல. லொகேஷன் பார்ப்பதற்காக அமெரிக்கா கிளம்பிக்கிட்டு இருக்கேன். போயிட்டு வந்ததும் மீதி விஷயத்தையும் உங்க காதுல போடுறேன் இப்ப ஆள விடுங்க" என்றவாறு டிரைவரிடம் ஏர்போர்ட்டுக்கு காரை விடச்சொல்லி கட்டளையிடுகிறார்.

வெள்ளி, 20 மார்ச், 2009

பணக்காரர்கள் சொத்து ஏழைகளுக்கு: வினயன் சொல்லும் சூப்பர் மேட்டர்


'காசி', 'என் மன வானில்', 'அற்புத தீவு' படங்களை தொடர்ந்து வினயன் தமிழில் இயக்கும் நான்காவது படம் ’நாளை நமதே’.

நாயகனாக நடிக்க, நூறுபேரை அழைத்துவந்து சலித்தெடுத்ததில் தேறிய பிரதீப்தான் இதில் நாயகன். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவராம். இன்னொரு நாயகனாக 'காதல்னா சும்மா இல்ல' படத்தில் நடித்த சர்வானந்த். நாயகி, 'தாதாசாஹிப்' என்னும் மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தனிஷா.

வினயன் படம் என்றாலே விஷயம் இல்லாமல் இருக்காது. இதிலும் விஷயம் இருக்கு.

இந்தியாவில் 110 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் சுமார் 10 கோடி மக்கள் நடைபாதையில் வசிப்பதோடு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடியுரிமை அட்டை என எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பல கோடி சொத்துக்களை வைத்திருக்கும் பணக்காரர்களும் இருக்கிறார்கள். இப்படி இருவேறுபட்ட பொருளாதார நிலையில் மக்கள் வசிக்கிறார்கள். 500 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்களின் சொத்தை அரசாங்கம் எடுத்து நடைபாதையில் வாழும் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை உள்ளடக்கிய கதை அம்சம் கொண்ட படமாக உருவாகிறதாம்.

"இப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஸ்மாவேலி கேரளாவில் ஆலுவாய் என்ற இடத்தில் ஜனசேவா என்ற பெயரில் முன்னூறு ஆதரவற்ற குழந்தைகள் கொண்ட ஒரு குழந்தைகள் நல காப்பகத்தை நடத்தி வருகிறார். இப்படி சேவை மனப்பான்மை கொண்ட அந்த தயாரிப்பாளருக்கு பொருத்தமான கதையாக நாளை நமதே படத்தின் கதை அமைந்திருக்கிறது" என்கிறார் வினயன்.

சண்டை இல்லாத 'சா...பூ...த்ரி...'


தலைப்பை படிக்கும் பலருக்கும் சின்ன வயதில் விளையாடிய இந்த ஆட்டத்தின் ஞாபகம் விரியும். அப்படின்னா இது விளையாட்டை அடிப்படையாக கொண்ட கதையா? இயக்குனர் அர்ஷத் கானிடம் கேட்டோம்.

"ஒரு ரொமான்டிக் காமெடி பிலிம். பதினெட்டு, இருபத்தைந்து, முப்பது வயதுடைய இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்களின் காதலையும் விவரிக்கும் படம். காதலையும், நகைச்சுவையையும் கலந்த சண்டை காட்சிகள் இல்லாத படமாக இதை உருவாக்கியுள்ளோம்" என்றார்.

மூன்று நாயகர்களில் ஒருவராக இயக்குனர் அர்ஷ்த்கானும் நடித்துள்ளார். சன் மியூசிக் புகழ் பிரஜின், புதுமுகம் அக்ஷய் இருவரும் மற்ற இரு ஹீரோக்கள். மிதுனா, சாரா, அக்ஷா, உஜ்ஜயினி, பிங்க்கி என ஐந்து நாயகிகள். மிதுனா தவிர மற்ற நால்வரும் புதுமுகங்கள். சாரா விளம்பர படங்களில் முகம் காட்டியவராம். அக்ஷா இலங்கையை சேர்ந்தவராம். உஜ்ஜயினி பின்னண் பாடகி.

'மனதோடு மழைக்காலம்', 'யாவரும் நலம்' படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள அர்ஷத்கான் இப்படமு மூலம் இயக்குனராகியுள்ளார். ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜேஷ்கண்ணா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் சிஷ்யரான அப்பாஸ் ரஃபிதான் படத்தோட இசையமைப்பாளர். ஐந்து பாட்டு அட்டகாசமாக வந்திருக்கிறதாம்.

கேசட் ரிலீசாகட்டும் கேட்டுட்டு சொல்றோம் என்கிறீர்களா?

வியாழன், 19 மார்ச், 2009

தங்கர்பச்சானின்‘களவாடிய பொழுதுகள்’


இதயத்தை களவாடுகிறது தங்கர்பச்சானின் புதுப்படத்தலைப்பு. ஐங்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘களவாடிய பொழுதுகள்'என பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன் தொடங்குவதாக இருந்தது இப்படம். பிரபுதேவாதான் நாயகன் என்பதில் தீர்க்கமாக இருந்தார் தங்கர். இடையில் பிரபுதேவாவின் மகன் இறந்துபோனதால், தற்போது தன்னால் நடிக்கமுடியாது என ஒதுங்கிக்கொண்டார் பிரபுதேவா. ஆனால் சூழ்நிலை சரியாகட்டும் என காத்திருந்த தங்கர், இப்போது தான் நினைத்தபடியே பிரபுதேவாவை காமிராமுன் நிற்கவைத்துவிட்டார்.

ஆடம்பர அழைப்பிதழ்கள் அடித்து பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல், நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் தங்கர். படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்துகொண்டிருகிறது. சொன்ன நாளில் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து தருவதாக பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளாராம் இயக்குனர். ;எங்கள் அண்ணா படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக பூமிகா நடிக்க, கதாநாயகனுக்கு சமமான பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறாராம்.

’என கனவு படைப்புகளில் இதுவும் ஒன்று. ஒரு அற்புதமான காதல் கதையை களவாடிய பொழுதுகளில் பார்க்கலாம்’ என ஆர்வத்தை தூண்டுகிறார் தங்கர்பச்சான்.

'தந்திரன்' படங்கள்










புதன், 18 மார்ச், 2009

அசின் மீது போலீஸில் புகார்


காணவில்லை.
-------------------

பெயர்: நல்லமுத்துக்குமார்,
வயது:23
உடற்கட்டு:வாட்ட சாட்டமான வாலிபர்,
ஊர்:செங்குன்றம்,சென்னை

போலீஸ் கமிஷனரிடம் நல்லமுத்துக்குமாரின் தாயார் கொடுத்துள்ள புகாரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் இது. அவரது புகார் இதுதான்,”எனது மகன் நல்லமுத்துக்குமார் (23) கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தான். போக்கிரி படப்பிடிப்பின் போது எனது மகனுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதிகம் சம்பளம் கொடுப்பதாக கூறி உதவியாளர் வேலைக்காக தன்னுடன் அழைத்து சென்று விட்டார் அசின். இடையில் ஒரு முறை சாலை விபத்தில் காயமடைந்த அவனை மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சென்னைக்கு அழைத்து வந்தேன்.

சென்னை வந்தபின் அவனை தன்னுடன் வேலைக்கு வரும்படி அழைத்தார் அசின். அவரது அழைப்பின் பேரில் மீண்டும் மும்பை சென்ற என் மகன் இப்போது எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை. அசினிடம் கேட்டால், அவரும் அவரது அப்பா ஜோசப்பும், உன் மகன் மும்பை தாதா கும்பலிடம் சேர்ந்துவிட்டான் என்று கூறுகிறார்கள். மும்பைக்கு நேரடியாகவே சென்று ஜோசப்பை சந்தித்தபோது, 'நீங்கள் சென்னை செல்லுங்கள். உங்கள் மகனை தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றார். சிறிது காலமாக நான் போன் செய்தால் கூட எடுப்பதில்லை. எனவே அவர்களிடமிருந்து என் மகனை மீட்டுத்தர வேண்டும்.”

இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ய தொடங்கிவிட்டனராம். சில மாதங்களுக்கு முன் சிறுமி ஒருவரை அசின் தலைமறைவாக வைத்திருப்பதாக அச்சிறுமியின் தயார் புகார்கொடுத்து பின் அந்த கேஸ் சுமூகமாக முடிவடைந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் அசின் மீது இரண்டாவது முறையாக புகார் கூறப்பட்டுள்ளது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 7-ந்தேதி ஜெயம்ரவி கல்யாணம்


ஜெயம்ரவி -ஆர்த்திக்கு முகூர்த்த தேதியாக ஜூன் 7-ந்தேதி குறிக்கப்பட்டுள்ளது. ”பேராண்மை’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ஜெயம்ரவி, தனது திருமணம் குறித்து வந்த செய்திகளுக்கு விளக்கமளித்தார். புதுமாப்பிள்ளையாகப்போகும் சந்தோஷம் ரவியின் முகத்தில் இப்போதே களைகட்டியுள்ளது.

”சிலபேரை அடிக்கடி நாம சந்திப்பதுண்டு. ஆனா அந்த நபரே ஒரு கட்டத்தில் நம்ம வாழ்க்கையின் முக்கிய பங்கு வகிக்கறவரா வந்து சேர்வார். அது மாதிரிதான் ஆர்த்தியும். எங்க ரெண்டு குடும்பமும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும்.அப்போதான் ஆர்த்தி எனக்கு அறிமுகம். ஜஸ்ட் பேமிலி பிரண்டா மட்டும் இருந்தோம். திடீர்னு ஒருநாள் ஆர்த்தி எனக்குதான்னு பேசி முடிச்சிட்டாங்க. அப்படித்தான் எங்க ரெண்டு பேரோட கல்யாணமும் முடிவானது. இதுவரை என் அப்பா,அண்ணன் பேச்சை மீறி நான் எதுவும் செய்ததில்லை.கல்யாண விஷயத்திலும் அவங்க விருப்பப்படித்தான் நடந்துக்கிறேன். ஆர்த்தி எங்கவீட்டு மருமகளாக வரப்போகிறதை நினைத்தால் சந்தோஷமாத்தான் இருக்கு. இதுவரைக்கும் விளையாட்டு பையனா இருந்துட்டேன். இனி குடும்ப பொறுப்பையும் சுமக்க கத்துக்கணும்.இது சுகமான சுமை” என கவிதை பாணியில் பேசுகிறார் புதுமாப்பிள்ளை.

கல்யாண ஏற்பாடுகள் பற்றி ரவியின் தந்தை எடிட்டர் மோகன் கூறியபோது,” ஜூன் 7-ந்தேதி ஜெயம்ரவி-ஆர்த்தி திருமணம் மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. பட தயாரிப்பாளர் விஜய்குமார்-சுஜாதா விஜயகுமார் தம்பதியின் மகளான ஆர்த்தி BCA வும் master of intermational management- ம் படித்திருக்கிறார்.கல்யாணத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அனைவரையும் அழைக்கவுள்ளோம்” என்றார்.

செவ்வாய், 17 மார்ச், 2009

ஸ்ருதி கமல்ஹாசனின் பெஸ்ட் பிரண்ட்


ஒரு ஹாய், ஒரு ஹலோ சொல்லி கைக்குலுக்கினாலே போதும் கிசு கிசுவ பத்தவச்சுடுறாங்கப்பா. லேட்டஸ்ட் காசிப்பில் சிக்கியிருப்பவர், ஸ்ருதி கமல்ஹாசன்.

ஸ்ருதிகமல் நடத்திவரும் இசைக்குழுவில் டிரம்மராக இருப்பவர் ஜெர்ரி. சமீப காலமாக நடத்தப்பட்ட கச்சேரிகளில் ஸ்ருதியும்-ஜெர்ரியும் ரொம்பவே நெருக்கம் காட்டியுள்ளனர். கச்சேரி பார்க்கவந்தவர்களின் கண்களில் இது சுண்ணாம்பு தடவ,செய்தி வேறுமாதிரி சிவக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே, இர்பான்கானுடன் ஸ்ருதி நடிக்கும் ‘லக்’ இந்தி படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடந்தபோது ஜெர்ரியும் கூடவே போக, அவர்களுக்குள் காதல் முளைத்துள்ளதாக, ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டது கிசுகிசு.

விஷயம் முற்றுவதற்குள், ஜெர்ரியுடனான நெருக்கம் பற்றி விளக்கமளித்துள்ளார் ஸ்ருதி.

“என்னோட பெஸ்ட் பிரண்டுகளில் ஜெர்ரியும் ஒருவர். இருவருக்குமே ஒரே மாதிரியான ரசனைதான். அலைவரிசை ஒத்துப்போறதால நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி டிஸ்கஸ் செய்துகொள்வோம். மற்றடி யாரும் புரளி கிளப்பிவிடும் அளவிற்கு தவறான எண்ணத்துடன் நாங்கள் பழகவில்லை. பார்ப்பவர்களில் கண்ணோட்டம்தான் தவறாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடந்த படப்பிடிப்பிற்கு ஜெர்ரி வந்ததும் உண்மைதான்.ஆனா இசைக்கச்சேரி சம்பந்தமாக பேசுவதற்காகவே அவர் வந்தார். நான் சினிமாவுக்கு வந்துட்டாலும் இசையை விட்டுவிடமாட்டேன். நான் நடத்திவரும் இசைக்குழுவிற்கு என்னோட பங்கு அதிகம் தேவைப்படுது. அதனாலதான் ஜெர்ரி என்னுடன் பேச வந்தார். மீடியாக்கள்தான் இதனை பெரிதுபடுத்திவிட்டது.” பேச்சில்கூட ஸ்ருதி பிசகவில்லை.

’கந்தசாமி’ விழாவில் இத்தாலி அழகிகள்


பாடல் வெளியீட்டு விழாவை ஒரே மாதிரி பார்த்து போரடித்து போனவர்களின் கண்களில், ஆச்சர்யம் அள்ளிக்கொட்டப்போகிறது கந்தசாமி விழா.

கலைப்புலி தாணு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கிவரும் படம் ‘கந்தசாமி’. இப்படத்தில் விக்ரம், பலவித தோற்றங்களில் நடிக்கிறார். இதில் பெண் வேடமும் அடக்கம். விக்ரம் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் விக்ரம் சொந்தக்குரலில் பாடியுள்ள பாடலும் இடம்பெற்றுள்ளது.

பூஜையில் ஆரம்பித்து, பாடல் வெளியீட்டு விழா வரை தண்ணீராய் செலவழித்து பிரம்மாண்டப்படுத்துவது தாணுவின் வழக்கம். கந்தசாமி ஆடியோ வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் தாணு. அடுத்த மாதம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கந்தசாமி பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.

இவ்விழாவில், இத்தாலி அழகிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக 50 நடனக்கலைஞர்கள் பிரத்யேகமாக வரவழைக்கப்படுகின்றனர். இந்த நடனக்குழு, கந்தசாமியில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றிலும் நடனமாடியுள்ளனராம். இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் ஹீரோ ஒருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

திங்கள், 16 மார்ச், 2009

கெளதம்மேனன் இயக்கத்தில் கார்த்திக்


புரோட்டா சுட்டு அடுக்குவதுபோல தனது படங்களின் பட்டியலை நீட்டிக்கொண்டேயிருக்கிறார் கெளதம் மேனன்.’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை முடிக்கும் முன்னே இன்னொரு படத்திற்கு முறுக்கு பிழிந்துவருகிறார். சூர்யா தம்பி கார்த்திக் கால்ஷீட் தராத கோவமோ என்னவோ, அதே பேர் கொண்ட தனது மானேஜரை ஹீரோவாக்கி, ஷமீராரெட்டியை அவருக்கு ஜோடியாக்கியுள்ளார்.

’வாரணம் ஆயிரம்’ படம் முடிந்த கையோடு, கெளதமின் மண்டைக்குள் உதித்த கதையும் ஆயிரம் இருக்கும் போல.’சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்திற்கு ஆயத்தமானவர், திடீரென அந்த புராஜக்டை தள்ளிவைத்தார். இனி அந்த படம் அவ்வளவுதான் என செய்தி போட்ட பத்திரிகையாளர்கள் மீதும் பாய்ந்தார்.’சென்னையில் ஒரு மழைக்காலம்’கைவிடப்படவில்லை என உறுதி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து வேறு படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரம் காட்டினார். அந்த படம்தான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. சிம்பு-த்ரிஷா நடிக்கும் இப்படம் சினிமாவை பின்னணியாக கொண்ட கதை என்கிறது கோலிவுட். இதில் சிம்பு உதவி இயக்குனர் வேடத்தில் நடிக்கிறாராம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில்தான் தனது மானேஜர் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு புதிய படத்தை இயக்கிவருகிறாராம் கெளதம். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த இரு தினங்களாக நடந்துவருகிறது. இப்படம் தவிர அடுத்தமாதம் இன்னொரு புதிய படத்தை இயக்கவும் அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம் கெளதம் சாரு....

'Pramma Deva' audio Function












Sarvam super Stills