திங்கள், 2 மார்ச், 2009

ஏ.ஆர்.ரஹ்மான் உச்ச ஸ்தாயி: இளையராஜா பாராட்டு



பொறாமை புகாத இடம் எது என்று கேட்டால் இசைக்கலைஞர்களின் உள்ளம் எனலாம். ஏ.ஆர்.ரஹ்மானுக்காக இசைக்கலைஞர்கள் சங்கம் எடுத்த பாராட்டு விழாவில் ரஹ்மானை பரிசாலும், பாராட்டு மழையாலும் நனையவைத்தனர் இசையமைப்பாளர்கள்.

சென்னையில் நேற்று மாலை பாலமுரளி கிருஷ்ணா தலைமையில் நடந்த விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் என இசை ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்டனர்.

"எல்லா புகழும் இறைவனுக்கே" என தனது உரையை தொடங்கினார் ரஹ்மான். "எங்கப்பா ஆசியால்தான் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மைதான். அவர் பட்ட கஷ்டத்திற்கு நான் அறுவடை செய்திருக்கிறேன். கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு முறை ஆஸ்கார் விருது வழங்கப்படும் போதும் சீனா, ஜப்பான், இத்தாலி ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே விருதுகள் கிடைத்து வந்தது.

அந்த விருதை இந்தியா வாங்க முடியாதா? என்று பலமுறை நினைத்து இருக்கிறேன். இங்கே இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், நவுசாத் போன்ற மேதைகள் எல்லாம் இருக்கிறார்கள். இளையராஜா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை இங்கு நான் நேரில் பார்த்தேன். இது ஆஸ்காரை விட பெரிய மரியாதை.

எனக்கு டைம் கிடைக்காத நேரத்தில்தான் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத்தேன். அந்த படத்திற்கு நான் இசையமைக்க எடுத்துக்கொண்ட காலம் 3 வாரங்கள்தான். அந்த இசையை நான் சமர்பித்த போது அமெரிக்கர்கள் எல்லாம் என்னைப் பார்த்து புன்னகைத்தார்கள்.

'ரோஜா' படத்திற்கு இசையமைத்தபோது அதன் பாடல்களை கேட்டு மற்றவர்கள் எல்லாம் எப்படி புன்னகைத்தார்களோ அதே போன்று புன்னகையை அந்த அமெரிக்கர்களின் முகத்தில் பார்த்தேன்.

ஆஸ்கார் விருதுகளை எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. இங்கிருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற மேதைகளுக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். பாலமுரளி கிருஷ்ணா பேசும்போது, இசையின் ஆழத்தை உணர முடிந்தது. இசையமைப்பாளர்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதற்கு நன்றி.

ஒவ்வொரு இசைக்கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இணையதளம் மூலம் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என் ரசிகர்களை நான் கேட்டுக் கொள்வது எல்லாம் யாரையும் திட்டாதீர்கள்.

விழாவில் பாலமுரளி கிருஷ்ணை, எம்,எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன், டைரக்டர் கே.பாலசந்தர் இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் பரத்வாஜ், தேவி ஸ்ரீபிரசாத், சங்கர் கணேஷ், யுவன்சங்கர் ராஜா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜன், மனோ, பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியின்போது இளையராஜா ஏ.ஆர்.ரஹாமானுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டி பேசியபோது,”'ஜான் வில்லியம்ஸ் என்ற இசையமைப்பாளர் நான்கு ஆஸ்கர் விருதுகளை வாங்கியிருக்கிறார். அந்த நான்கையும் அவர் வாங்குவதற்கு கால இடைவெளி அதிகம் தேவைப்பட்டது. ஆனால், ரஹ்மான் மட்டும்தான் 'சொடக்கு' போடுவதற்குள் இந்த கையில் ஒன்று, அந்த கையில் ஒன்றுமாக இரண்டு விருதுகளை வாங்கினார். இது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இசை என்பது விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இசையில் கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி, உச்ச ஸ்தாயி என்று உண்டு. என்னை பொருத்தவரை ரஹ்மான் உச்ச ஸ்தாயி என்ற ஸ்தானத்தை அடைந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்' என்று கூறினார்.

முன்னதாக ரஹ்மானுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மோதிரம் அணிவித்தார்.சங்கர் கணேஷ் ஏ.ஆர்.ரஹ்மானை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விழா குழு சார்பில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன உலக உருண்டை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக