ஞாயிறு, 20 டிசம்பர், 2009

‘கந்தகோட்டை’ விமர்சனம்

பெட்டிக்கடைகளிலும் கிடைக்கும் அளவிற்கு மலிவாகிவிட்ட மசாலா பார்முலாவில் காதல்,கத்தல், கத்தி எல்லாவற்றையும் கூட்டுவைத்து, ரசிகர்களின் கண்ணுக்கும் காதுக்கும் வேட்டு வைக்கும் படம்.
ஹீரோ நகுலுக்கு காதலுக்கு சிகப்புக்கொடி காட்டும் வேலை என்றால் நாயகி பூர்னா, காதலர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் சேவையில் தீவிரம் காட்டுகிறார். இருவரும் காதலர்களாக மாறும்போது இடைவேளை வருமென்பது பச்ச புள்ளைகளுக்கும் தெரிந்த்துதானே! இதிலும் அது நடக்கிறது.
நகுல் சொன்ன ஐ லவ் யூவுக்கு பதில் சொல்லாமல் பஸ் ஏறும் பூர்ணாவுக்கு ஊரில் ஒரு பிரச்சனை வருகிறது. காதலியை பார்ப்பதற்காக நாகர்கோயிலுக்கு போகும் நகுலுக்கு இது தெரியவர, அடுத்த நிமிஷத்திலிருந்து ஆரம்பமாகிறது வில்லனுடனான மோதல். கடைசியில் எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.
நகுல் ஸ்டூடண்டா, வேலை தேடுபவரா என்ற எந்த விபரமும் தெரியாமலேயே கடைசிவரை கண்ணாமூச்சி காட்டியிருக்கும் இயக்குனரின் திறமை ‘பளிச்சிடுகிறது’. குறைந்த பட்சம் அவரும் அவரது நண்பர்களும் வெட்டி ஆபீசர்கள் என்பதை காட்டியிருந்தலாவது நிம்மதி இருந்திருக்கும்.
நகுலின் சுறுசுறுப்பு, பாட்டுக்கும் பைட்டுக்கும் தோள் கொடுத்தாலும் முக பாவணைகளில் இயல்பு காணாமல்போவது மைனஸ். காமெடி பெயரில் கடித்துகுதறுகிறார் சந்தானம், அடிக்கடி ஜட்டி போட்டிருக்கியா? என்று கேட்பதெல்லாம் அபத்தம்.
”டேய் வாடா வாடா.... என் கையாலதான் உனக்கு சாவு வாடா வாடா” என்று வில்லன் சம்பத் கத்தும்போதெல்லாம் காது ஜவ்வில் விழுகிறது ஓட்டை.
ஹீரோவும் வில்லனும் மோதும்போது நாம இசையுடன் மோ’தினா’ என்ன என்று நினைத்திருப்பார்போல தினா. டகட டகட டகட என்று ஒரு பின்னணி கொடுத்திருக்காருங்க பாருங்க. படத்துல அதுவும் ஒரு வில்லனாக மிரட்டுகிறது. ‘கல கல கந்தகோட்டை’ பாட்டு குத்தாட்ட ப்ரியர்களுக்கு குஷி. நகுலின் குரலில்‘உன்னை காதலி என்று சொல்லவா’ பாடல் ரசிக்கலாம். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் ஆங்காங்கே அவுட்டாப் ஃபோக்கஸ்.
’கந்தகோட்டை’ நொந்தகோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக