செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்


காய்த்த மரம்தான் கல்லடிபடும் என்பார்கள். அந்த வகையில் நான் கடவுள் படம் கல்லடியும் பட்டிருக்கிறது கண்ணடியும் பட்டிருக்கிறது.

எப்போது இவர் படம் வெளிவரும், எப்படியிருக்கும் என்ற ஆவலை தூண்டும் இயக்குனர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இருக்கிறார்கள். இவ்வகையில் பாலாவுக்கும் விடலாம் ஒரு விரலை. எடுத்தது நான்கே படங்கள்தான் என்றாலும் தமிழ் சினிமாவில் பாலா உண்டாக்கிய தாக்கம், அத்திபூக்கும் செயலுக்கு ஒத்தது.

இதோ கடவுள் வெளிவந்து ஒரு வாரமாகிவிட்டது. படித்தவர்முதல் பாமரர்வரை நான் கடவுளுக்கு தரும் மதிப்புரை பலரகங்கள். ஒரு பக்கம் ஆஹா அற்புதம்... என்ற பாராட்டுக்களும், கைத்தட்டல்களும் பாலாவின் உழைப்பிற்கும் திறமைக்கும் உற்சாக டானிக்கை வார்த்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கசப்பான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

சூப்பர் ஸ்டார், கலைஞானியின் படங்களுக்குகூட இல்லாத அளவில் நான் கடவுளுக்கு வரும் ஏராள விமர்சனங்கள் செவிகளில் விழுந்து சிந்தனையின் அதிகபட்ச இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு வருகின்றன. இதுவரை எந்தவொரு தமிழ்சினிமாவுக்கும் இல்லாத வகையில் பாலா படத்திற்கு ஏகப்பட்ட இணையதளங்களும், வலைப்பூக்களும் (Blog) விமர்சனங்களை பதிவு செய்துள்ளது.

விமர்சனத்தில் Good போட்டவர்களும் உண்டு. குட்டு வைத்தவர்களும் உண்டு. தங்களை அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொண்டிருப்பவர்களின் கருத்துத்தானே என சாதாரணமாக இதனை எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் பட்டாணி சுண்டல் விற்பவர் முதல் பலதரப்பட்ட ரசிகர்களும் படம்விட்டு வெளியே வரும்போது வெளிப்படுத்தும் கருத்துக்களும் இப்படித்தான் தினுசு தினுசாக இருக்கிறது.


"ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டிய ஒரு புதினத்தை இரண்டரை மணி நேரத்தில் அடைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் 500 பக்கங்கள் அல்லது அரை கிணறுதான் தாண்ட முடிந்திருப்பது வேதனை. இரண்டு கதைகளையும் அதற்கான தளத்தையும் முடிவு செய்துவி்ட்டு எதற்கு முக்கியத்துவம் தருவது என குழம்பிபோய் இரண்டையும் சொதப்பியிருக்கிறார் பாலா. காசியில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் படமாக்கியதாய் பேட்டிகளில் அறிய முடிந்திருந்தது. ஆனால் படத்தில் அரை மணி நேரம்கூட அந்தக் காட்சிகள் வராமல்போனது ஏமாற்றம்" என அதிஷா ஆன்லைனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிச்சைப்பாத்திரம் என்ற வலைப்பூவில் (Blogspot) "பாலா தனது திரைப்படங்களை தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் அடைத்துக் கொள்ள விரும்புகிறார். ஒருவன் இருப்பான், மிக வலிமையானவன், மூர்க்கன், பஞ்ச பூதங்களைத்தவிர .யாராலும் அவனைக் கட்டு்பபடுத்த இயலாது. சட்டமும் நீதியும் கூட அவனை ஒன்றும் செய்ய முடியாது. சமூகத்தின் தீயசக்தியை வன்முறையின் உக்கிரத்தோடு அழித்து விடுவான். அமைதியாக இருக்கும் அவனை அதற்கு யாராவது உசுப்பிவிட வேண்டும். மிகக்கொடூரமான பூடகமான சூழலில் உருவாக்கப்படும் அவன் சமூகத்தின் நீரோட்டத்தில் கலக்க முற்படும்போது அதற்கான மோதல்கள் நிகழும்.

பாலாவின் நாயகர்கள் தொடர்ந்து இப்படித்தான் இருக்கிறார்கள். இப்போது ருத்ரனாக ஆர்யா. அருவாளை தூக்கிக் கொண்டு எதிர்நாயகனை நோக்கி வீர வசனம் பேசும் வழக்கமான வெகுஜனப்பட நாயகர்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகத்தான் பாலாவின் நாயகர்களைப் பார்க்க முடிகிறது. இதுவே பார்வையாளனுக்கு ஒரு சலிப்பைத் தரக்கூடும்." என தனது கருத்தை பதிவு செய்துள்ளார் வலைப்பூவின் சொந்தக்காரர்.

"கண்ணுக்கு புலப்பட்டும், மனசுக்கு புலப்படாத பி்ச்சைக்காரர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தி, த்தோ பாருங்கடா என்கிறார் பாலா! விளிம்பு நிலை மனிதர்களின் அவலத்தை இதைவிட செருப்பால் அடித்தாற் போல சொன்னவர்கள் எவரும் இலர். ஜெயமோகனின் வசனங்களில் தெறிக்கும் அனல். தாரை காய்ச்சி ஊற்றியது போல அவ்வளவு சூடு. படம் முடிந்து வெளியே வரும்போது, "சே... என்னடா உலகம் இது" என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள் இருவரும்! என தமிழ்சினிமா இணையதளததில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

தாமிரா புலம்பல்கள் என்னும் வலைப்பூவில்...

"எனக்கு பர்சனலா என்ன வருத்தம்னா, படத்தில் காட்டப்பட்டுள்ள மாற்றுத்திறன் படைத்த மனிதர்களைப் பார்க்கும்போதே நமக்கு அதன் வீரியம் விளங்கிவிடுகிறது. இதில் அவர்களை ஒரு கட்டத்தில் கொடுமைப்படுத்துவதுபோல காட்சிகள் அமைக்க வேண்டுமா? அது நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் காண விரும்பாவிட்டால் அது இல்லை என்றாகிவிடாது என்பது சரிதான். இருப்பினும் பாலா போன்ற இயக்குனர்கள் வசனங்களாலேயே தேவையான தாக்கத்தை ஏற்படுத்திவிடமுடியும் என்றே நம்புகிறேன். இன்னொரு காட்சியில் வில்லன் ஒரு ஊனமுற்ற பெண்ணை கல்லால் தாக்குவது. அதை அவ்வளவு நீண்ட நேரம் காட்ட வேண்டிய அவசியமில்லை. மேலும் அந்த பெரிய கல்லால் அவ்வளவு தூரம் தாக்கப்படும் பெண் உயிரிழப்பது அரிது என்பதை யாவரும் உணர்வர்" என விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஞானியின் ஓ பக்கங்களில் இந்த வார குட்டு பாலாவுக்குதான். "ஊனமுற்றவர்களை வைத்து பிச்சை வியாபாரம் செய்யும் தன்னுடைய தாண்டவன் பாத்திரம் போல, நானும் உடல் ஊனமும் மனநலக் குறையும் உடையவர்களை வைத்துப் படம் எடுத்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிப் பிழைப்பதற்காக அவர்களுடைய மனித உரிமைகளை மீறியிரு்ககும் இயக்குனர் பாலாவுக்கும், இந்த அராஜகமான படத்தை குழந்தைகளும் பார்க்கலாம் என்று 'யூஏ' சான்றிதழ் கொடுத்திருக்கும் தணிக்கைக் குழுவுக்கும் இந்த வார குட்டு".

பல சமயங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும் படைப்புகள், காலங்கடந்தும் வேறூன்றி நிற்கும் விருட்சமாக மாறும். நான் கடவுள் விருட்சம்தான். இந்த விருட்சம் வருங்கால இயக்குனர்களுக்கு விதைத்திருக்கும் பாடமும் உள்ளீடாக தெரிகிறது.

விமர்சனங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பத்திரிகையாளர்கள் காட்சி முடிந்து வெளிவந்ததும் எதிர்பட்ட பாலாவிடம் ஒரு நிருபர் வைத்தகேள்வி இதுதான். பல காட்சிகள் முழுமை பெறாமல் தொங்குவது போன்ற ஒரு உணர்வு வருகிறதே?

இதற்கு பாலா சொன்ன பதில்தான் தத்துவத்தின் அடையாளமாக இருந்தது. "வாழ்க்கையிலும் எந்தக் காட்சிதான் முழுமையானது என்று சொல்ல முடியுமா? ஒரு நாளேனும் முழுமையாய் வாழ்ந்து விட்டால் அடுத்த நாளின் மகத்துவம் புரியாது. மனசு, வாழ்க்கை எல்லாவற்றிலும் உள்ள குறைகள்தான் இந்தப்படத்திலும் தெரியும். அவற்றை தெரி்நதேதான் அனுமதித்தேன்" என்றார் பாலா.

You can give a link at the end... This is one movie which has received lots of
reviews in internet

http://tamil.cinesouth.com/scopes/reviews/new/naankeng.shtml
http://www.athishaonline.com/2009/02/blog-post_07.html - Athisha
http://pitchaipathiram.blogspot.com/2009/02/blog-post.html - Suresh Kannan
http://ennam.blogspot.com/2009/02/blog-post.html - Abdul Kalam Azad
http://thamira-pulampalkal.blogspot.com/2009/02/blog-post_07.html - Thamira
http://mathavaraj.blogspot.com/2009/02/blog-post_07.html - Madhavaraj
http://snapjudge.com/2009/01/21/நான்-கடவுள்-சென்சார்-விம/
- Snap Judgement
http://truetamilans.blogspot.com/2009/02/blog-post_06.html - True Tamilan
http://www.luckylookonline.com/2009/02/blog-post_06.html - Yuva Krishna
http://urfriendchennai.blogspot.com/2009/02/blog-post_10.html - Ram Suresh

1 கருத்து: