
மேளதாளங்கள் முழங்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்லம்டாக் படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று தமிழகத்திற்கும் இந்திய திரையுலகத்திற்கும் பெருமைசேர்த்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தேசியகொடியை அசைத்து வாழ்த்து முழக்கம் எழுப்பினர். கரகாட்டம், மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.அமைச்சர் பரிதி இளம் வழுதி,விமான நிலையத்திற்கு சென்று தமிழக அரசு சார்பில் வரவேற்றார்.
பின்னர், கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ரஹ்மான் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். வீட்டிற்கு அருகே போடப்பட்டிருந்த மேடையில் டிரம்ஸ் சிவமணி டிரம்ஸ் இசைத்து ரஹ்மானை வரவேற்றார். மேடையில் நடிகர்கள் பார்த்திபன், சிம்பு ஆகியோர் இருந்தனர். வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ஆஸ்கார் விருதுகளை கையில் உயர்த்தி பிடித்து காண்பித்தபோது ரஹ்மானுக்கு பறக்கும் முத்தங்களை வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக