செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டு விழா : திரளும் திரையுலகம்


ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹமானுக்கு பிரமாண்டமான பாராட்டு விழாக்களை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழ்த் திரைப்பட தயாரி்பபாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
"ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றவுடன் முதலில் கூறியது "எல்லா புகழும் இறைவனுக்கே" என்பதுதான். தான் வாழ்ந்த தமிழகத்தையும் தமிழினத்தையும், தமிழையும் மறக்காமல் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழர்களின் மனதில் ஒரு அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார்.

தான் சுவாசித்து, நேசித்த தமிழை மறக்காமல், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். உலக இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பின்பும் அடக்கமாகவும், எளிமையாகவும் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், என்றென்றும் பெயரோடும், புகழோடும் வாழ்வார்.

தமிழர்களை தலைநிமிர வைத்த அவருக்கு தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து பிரிவினரும் சேர்ந்து ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் இணைந்து, மிக பிரமாண்டமான முறையில், மாபெரும் பாராட்டு விழா நடத்த முடிவு செய்து இருக்கிறோம்" என தெரிவி்த்துள்ளார்.
இதற்கு முன்னதாக திரை இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடக்கவுள்ளது.




இதுகுறித்து அச்சங்கம் அறிவித்துள்ளதாவது:-
மார்ச் 1-ம் தேதி மாலை, திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஆடிட்டோரியத்தில் உலகின் மிகப்பெரிய விருதான ஆஸ்கார் விருதினை பெற்ற முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி கௌரவப்படுத்தும் முதல் விழாவை வண்ணமயமாக நடத்தவிருக்கிறோம்.
மேலும் அவர் பெற்ற, 'கோல்டன் குளோப்' மற்றும் 'பாப்டா' விருதுகளுக்காகவும் பாராட்டவிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு செவாலியர் டாக்டர்.எம்.பாலமுரளிகிருஷ்ணா தலைமை ஏற்கிறார். ஏ.வி.எம்.சரவணன், கே.பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரஹமானை பாராட்டி பேசவிருக்கிறார்கள். இந்த மாபெரும் விழாவில் எங்கள் திரைஇசைக்கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பிரபல பாடகர், பாடகிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற இசை வல்லுனர்களும் இசை நட்சத்திரங்களும் விழா மேடையை அலங்கரிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக